2013-06-20 15:58:57

ஜூன்,21,2013 கற்றனைத்தூறும்... தொண்டை


சில நேரங்களில் தொண்டையில் ஏற்படும் வலியால் குழந்தை, எச்சிலை விழுங்கக்கூட சிரமப்படும். முறையாகப் பதப்படுத்தப்படாத உணவுகளையும், குளிர்பானங்களையும் உட்கொள்வதால் தொண்டைப் பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும். சாலையோரக் குளிர்பானம், கரும்புச்சாறு, பழச்சாறு ஆகியவற்றில் கிருமி இருந்தால் தொண்டைப் பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு தொந்தரவு செய்யும். குரல்வளை மற்றும் மூச்சுக்குழாய்ப் பகுதியில் நச்சுக்கிருமிகள் சேர்வதால் இருமல், குரல்மாற்றம், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் குழந்தைகளின் சுவாசம் தடைபட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். தொண்டையில் சிறு பிரச்சனை உருவாகும்போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவில் தீர்வு காணலாம்.
காதிலோ, மூக்கிலோ நுழையும்படியான, அல்லது, வாயில்போட்டு விழுங்கும்படியான பொருட்களை குழந்தைகள் கைகளில் வைத்திருக்க அனுமதிக்கலாகாது.
காதிலும், மூக்கிலும் பொருட்களைப் போடும்போது அடைப்பு, இரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வாயில் போட்டு விழுங்கும்போது காசு, கொட்டை வகைகள் போன்றவை உணவுக்குழாய் மற்றும் மூச்சுக்குழாயில் சென்று அடைபடும். மூச்சுக்குழாயில் சென்று அடைக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், காதுவலி, தொண்டை வலி போன்றவை வராமல் பாதுகாக்கவேண்டும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதால் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும். தூசு மற்றும் அசுத்தமான சுற்றுப்புறத்தால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாகப் பார்க்கவேண்டும்.

ஆதாரம் : தினமணி








All the contents on this site are copyrighted ©.