2013-06-20 15:45:07

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னை மரியா உருவச் சிலையால் பதட்டம்


ஜூன்,20,2013. பழங்குடி பெண்களில் ஒருவரைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள அன்னை மரியாவின் உருவச் சிலை ஒன்றை, கர்தினால் Telesphor Toppo அவர்கள், இராஞ்சியில் அண்மையில் திறந்துவைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் Sarna என்ற பழங்குடியினப் பெண்கள் தனிப்பட்ட வகையில் சேலை அணிவதும், தங்கள் தோள் மீது தொட்டில் போன்று துணி கட்டி, அதில் தங்கள் குழந்தைகளைத் தூக்கிச் செல்வதும் வழக்கம்.
Sarna பழங்குடியினப் பெண்களைப் போல், அன்னை மரியா சேலை அணிந்து, குழந்தை இயேசுவைத் தூக்கிச் செல்வதுபோல் அமைந்துள்ள உருவச் சிலைக்கு, பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அன்னை மரியா அயல் நாட்டவர் என்றும், இவ்வகையில் அவரை வடிவமைத்திருப்பது, பழங்குடி மக்களை மனமாற்றும் முயற்சி என்றும் இம்மக்கள் மத்தியில் மதத் தலைவராக உள்ள Bandhan Tigga செய்தியாளர்களிடம் கூறினார்.
இவ்விதம் அமைந்துள்ள அன்னை மரியாவின் உருவச் சிலை அப்புறப்படுத்தப்பட வேண்டும், அல்லது, அவரது வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், இல்லையேல் போராட்டங்கள் நிகழும் என்று Tigga எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் மத்தியில் இத்தகைய பாகுபாடான உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்து கொள்வது வரவிருக்கும் தேர்தலையொட்டி ஒரு சிலர் மேற்கொள்ளும் பிரித்தாளும் முயற்சிகள் என்று இராஞ்சிப் பேராயர், கர்தினால் Telesphor Toppo பதில் அளித்துள்ளார்.
நாங்கள் பிறப்பால் பழங்குடியினர் என்றும், எங்கள் சொந்த விருப்பத்தால் கிறிஸ்தவ மறையைத் தழுவினோம் என்றும் கூறிய கர்தினால் Toppo, கிறிஸ்தவப் பள்ளிகளில் பயின்ற பல தலைவர்கள் இன்றும் இந்துக்களாகவே உள்ளனர், அவர்களை மனமாற்றும் முயற்சிகள் எதுவும் கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : Times of India








All the contents on this site are copyrighted ©.