2013-06-20 15:43:11

இறை அன்பிலும் பிறரன்பிலும் நமது நம்பிக்கை வெளியாவதையே வலியுறுத்த விரும்புகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,20,2013. நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில், இந்த நம்பிக்கை இறை அன்பிலும் பிறரன்பிலும் வெளியாவதையே கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியாளர் என்ற முறையில் நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கீழை வழிபாட்டு முறையைச் சார்ந்த திருஅவைகளின் பிறரன்புப் பணிகள் குறித்த கூட்டம் இப்புதன், வியாழன் ஆகிய நாட்களில் வத்திக்கானில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பத்து நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பிறரன்பு நிறுவனங்கள் பங்கேற்றன.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டோரை இவ்வியாழன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்பின் வழியாகவே நம்பிக்கையை நாம் வளர்க்க முடியும் என்பதை தன் உரையில் வலியுறுத்தினார்.
அலெக்சாந்திரியா, பாபிலோன், சிரியா, எருசலேம் ஆகிய நகரங்களிலிருந்து இக்கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைத்து முதுபெரும் தலைவர்களையும் காணும்போது, இப்பகுதிகளில் திருஅவை சந்தித்து வரும் சவால்களையும் எண்ணிப்பார்க்க நம்மைத் தூண்டுகிறது என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
மத்தியக்கிழக்குப் பகுதிகளில், சிறப்பாக, சிரியாவிலும், புனித பூமியிலும் வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரின் வழியாக நான் அனுப்பும் வேண்டுகோள் இது ஒன்றே: அதாவது, இப்பகுதிகளில் நிலவும் துயரங்களை உடனே முடிவுக்குக் கொணரும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அழைப்பு விடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வந்திருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.