2013-06-19 17:02:55

ஐ.நா. அவையின் பொதுநலக் கருத்துக்களை முன்னிறுத்தும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள்


ஜூன்,19,2013. மனித வர்த்தகத்தின் கொடுமைகள், போரினால் பாதிக்கப்பட்ட காபுல் நகரின் தெருக்களில் வாழும் ஒரு சிறுவனின் நம்பிக்கை, மற்றும் வயது முதிர்ந்தோருக்கு உதவுதல் ஆகிய கருப்பொருட்கள் கொண்ட வானொலி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் கலை விழாக்களின் ஓர் அங்கமாக, ஐ.நா. அவையும், நியூயார்க் நகரும் இணைந்து, இத்திங்கள் இரவு வழங்கிய தங்கப் பதக்கத்தை, பாஸ்டன் நகரைச் சேர்ந்த Philip Martin என்பவர் பெற்றார்.
ஐ.நா. அவையின் பொதுநலக் கருத்துக்களை முன்னிறுத்தும் வானொலி நிகழ்வுகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில், "Underground Trade" என்ற தலைப்பில், மனித வர்த்தகத்தின் கொடுமைகளை விளக்கும் பாஸ்டன் நகர WGBH வானொலி நிலைய நிகழ்வு முதல் பரிசைப் பெற்றது.
நெதர்லாந்து வானொலி நிலையம் உருவாக்கியிருந்த காபுல் நகரச் சிறுவனைப் பற்றிய நிகழ்ச்சி வெள்ளிப்பதக்கத்தையும், கனடா நாட்டு வானொலி, முதியோருக்கு உதவுதல் குறித்து உருவாக்கியிருந்த நிகழ்ச்சி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
1957ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நியூயார்க் கலை விழாக்களில், 1990ம் ஆண்டு முதல் ஐ.நா.வும், நியூயார்க் நகரும் இணைந்து சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட வானொலி நிகழ்சிகளுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றன.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.