2013-06-19 17:00:39

450க்கும் அதிகமான குழந்தைகள் வருகிற ஞாயிறன்று உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தையைச் சந்திப்பர்


ஜூன்,19,2013. வசதிகள் குறைந்த குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 450க்கும் அதிகமான குழந்தைகள் ஜூன் 23, வருகிற ஞாயிறன்று உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தையைச் சந்திப்பர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மதங்களுக்கு இடையே நல்லுறவையும், உரையாடலையும் வளர்க்கும் வண்ணம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் 'புறவினத்தார் முற்றம்' என்ற முயற்சி துவக்கப்பட்டது.
இந்த முயற்சியின் ஓர் அங்கமாக, "குழந்தைகளின் இரயில்: அழகின் வழி ஒரு பயணம்" என்ற பெயர் தாங்கிய ஒரு பயணத்தில் Milan, Bologna, Florence ஆகிய நகரங்களில் உள்ள பேராயலங்களில் 450க்கும் அதிகமான குழந்தைகள் கல்விச் சுற்றுலா மேற்கொள்கின்றனர்.
இந்தச் சுற்றுலா இந்த ஞாயிறன்று மிலான் நகரில் ஆரம்பமாகி, இறுதியில் வத்திக்கானில் உள்ள இரயில் நிலையத்தில் முடிவுறும் என்றும், இப்பயணத்தின் இறுதியில், இக்குழந்தைகளைத் திருத்தந்தை சந்திப்பார் என்றும் திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவரான கர்தினால் Gianfranco Ravasi கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / VIS








All the contents on this site are copyrighted ©.