2013-06-18 17:15:44

திருத்தந்தை : பகைவர்களையும் அன்புகூராதவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது


ஜூன்,18,2013. உங்கள் பகைவர்களிடமும் அன்புகூருங்கள் என இயேசு நம்மை நோக்கிக் கேட்பது நம்மால் இயலாத ஒன்றாகத் தெரியலாம், ஆனால் நம் பகைவர்களை நாம் அன்புகூரவில்லையெனில், நாம் கிறிஸ்தவர்களாக இருக்கமுடியாது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பகைவரையும் அன்புகூர இயேசு விடுக்கும் அழைப்பு, உலகினின்று விலகி, அடைபட்ட துறவு மடத்தில் வாழ்வோருக்கும், புனிதர்களுக்கும் மட்டுமே உரியது என நாம் ஒதுக்கத் தேவையில்லை, ஏனெனில் நம்மால் இதனை ஆற்றமுடியும் என இயேசு கூறுகிறார் என்றார் திருத்தந்தை.
உங்களைத் துன்புறுத்துவோருக்காகவும் செபியுங்கள் என இயேசு விடுக்கும் விண்ணப்பத்திற்கு நாம் சரி என உரைத்தால், நாம் மேலும் அவர்களுக்காக செபிப்பது என்பதே சரியான பாதையாக இருக்கும் என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் விண்ணப்பத்தை நாம் மறுத்தால் அடுத்தவரின் பகைவராக, தொடர்ந்து பழிவாங்குதலிலேயே வாழ்ந்து கொண்டிருப்போம் எனவும் தெரிவித்தார்.
நம்மைத் துன்புறுத்துவோரின் மனமாற்றத்திற்காக செபிக்கவேண்டிய கடமையும் நமக்கு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எவ்வாறு இயேசுவின் ஏழ்மை நிலை நம் மீட்பிற்கான அருளாக மாறியதோ, அதுபோல் பகைவர்கள் மீது நாம் காட்டும் அன்பும் மன்னிப்பும் நம்மை ஏழ்மை நிலைக்குக் கொணர்ந்தாலும், அந்த ஏழ்மையே வளமையின் விதை, மற்றும் பிறர்க்கான அன்பு என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.