சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
ஜூன்,17,2013. சங்க இலக்கியத்திலுள்ள பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில்
வாழ்ந்து வருபவருமான வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கு கனடாவின் டொரான்டோ பல்கலைகழகமும்,
தமிழ் இலக்கியத் தோட்டமும் விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளன. இதுவரை சங்க இலக்கியத்தின்
பன்னிரெண்டு படைப்புகளை மொழிபெயர்த்துள்ள வைதேகி அவர்கள், இதர ஆறு படைப்புகளையும் அடுத்த
ஆண்டு (2014) இறுதிக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். பதிற்றுப்பத்தை
முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகக் கூறும் அவர், சங்க இலக்கியத்தைப் பொருத்தவரையில்
இதுவரை யாருமே ஒரு நூலுக்கு மேல் மொழிபெயர்த்தது கிடையாது எனவும் தெரிவிக்கிறார். தனது
மொழிபெயர்ப்புகள் வர்த்தக ரீதியில் எவ்விதப் பலனையும் அளிக்காது என்பதை தான் நன்கு உணர்ந்துள்ளதாகவும்
வைதேகி ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார்.