2013-06-17 16:57:40

G8 நாடுகளின் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி


ஜூன்,17,2013. அனைத்துவிதமான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் எடுக்கப்படும்போது, மனிதனின் முக்கியத்துவம், குறிப்பாக, ஏழைகளுக்குரிய முக்கியத்துவம் வலியுறுத்தப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்திங்களும் செவ்வாயும் வட அயர்லாந்தின் Lough Erne எனுமிடத்தில் இடம்பெறும் G8 நாடுகளின் கூட்டத்திற்கு என, அதன் தற்போதைய தலைவர் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, சுதந்திரமாக இயங்கக்கூடிய அனைத்துலக சந்தை வியாபாரம், வரிவிதிப்பு, அரசுகளின் வெளிப்படையான நிர்வாகம் போன்ற தலைப்புகளில் விவாதம் இடம்பெற உள்ளது குறித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
மனிதனுக்குரிய முக்கியத்துவம், பசிக்கொடுமையை முற்றிலுமாக ஒழித்தல், உணவு பாதுகாப்பை உறுதிச்செய்தல் என்பவைகளோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளை வன்முறைகளிலிருந்து காப்பாற்ற வேண்டியதும் உறுதி செய்யப்படவேண்டும் எனவும் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.
சரிநிகரான, அதேவேளை, நீதியுடன் கூடிய அமைதியை உறுதி செய்யவேண்டிய தொலைநோக்குத் திட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
இன்றையப் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் அறநெறி மற்றும் உண்மையால் வழிநடத்தப்படுவதாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் குறிக்கோள், மனித சமுதாயத்திற்குச் சேவையாற்றுவதை நோக்கம் கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : SEDOC








All the contents on this site are copyrighted ©.