2013-06-15 16:20:45

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வு, இறைவனோடு ஒப்புரவாகும் பாதையை அறிவிக்கின்றது


ஜூன்,15,2013. மனிதர்களாகிய நம்மை இறைவனோடு ஒப்புரவாக்குவதற்கு, இயேசு நம் பாவங்களைத் தம்மீது சுமந்து நமக்காகப் பாவமானார் என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாழ்வை வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தினமும் காலை 7 மணிக்கு புனித மார்த்தா இல்லத்தில் திருப்பலி நிகழ்த்தி அன்றைய நாளின் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் இச்சனிக்கிழமை காலைத் திருப்பலியில் இவ்வாறு கூறினார்.
ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு விண்ணகத்துக்கு இட்டுச்செல்லும் சாலையை வரைந்து கொண்டிருப்பது கிறிஸ்தவ வாழ்வு அல்ல, மாறாக, நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்குவதற்காக கிறிஸ்து நமக்காகப் பாவமானார் என்பதை அறிவிக்கும் சாலையில் தங்கியிருக்க நம்மை ஊக்கப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள வாழ்வு அது என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் மையச் செய்தியான இந்த ஒப்புரவு வாழ்வை நாம் அறிவிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்நாளின் முதல் வாசகத்தில் (2கொரி.5,14-21) ஒப்புரவு என்ற சொல் ஐந்து தடவைகள் வந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான ஒப்புரவு என்றால் என்ன என்றும் விளக்கினார்.
கிறிஸ்தவர்கள் தங்களின் பணியை உண்மையாகப் புரிந்துகொண்டு, அதற்குச் சாட்சியாக வாழ அழைக்கப்படுவது குறித்து விளக்கிய பிரான்சிஸ், கிறிஸ்து நமக்காகப் பாவியானார், எனவே நமது பாவங்கள் ஏற்கனவே அவரது உடலிலும் ஆன்மாவிலும் உள்ளன என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.