2013-06-14 16:37:07

திருத்தந்தை பிரான்சிஸ் : சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டி எழுப்புங்கள்


ஜூன்,14,2013. எல்லைகளின் மனிதர்களாகிய ஊடகவியலாளர் சுவர்களை அல்ல, மாறாக, திறந்த மனத்தோடும் இதயத்தோடும் பாலங்களைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாதம் இருமுறை வெளியாகும் “La Civiltà Cattolica” என்ற இயேசு சபையினரின் இத்தாலிய இதழின் பணியாளர்கள் முப்பது பேரை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்தக் கத்தோதலிக்க இதழின் 163 ஆண்டுகால இடையறாப் பணியைப் பாராட்டினார்.
உரையாடல், தேர்ந்து தெளிதல், எல்லைகள் ஆகிய மூன்று தலைப்புகளில் உரையாற்றிய திருத்தந்தை, கத்தோலிக்க கலாச்சாரத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றும் இப்பணியாளர்கள், கிறிஸ்தவரல்லாதவர்கள் உட்பட எல்லா மனிதர்களோடும் உரையாடலை ஏற்படுத்தும் பாலங்களை எழுப்புவதை முக்கிய பணியாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
இவ்வுலகில் விவாதித்துப் பகிர்ந்து கொள்வதற்குப் பல விவகாரங்கள் உள்ளன, ஆயினும், உரையாடலே, உண்மைக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த உண்மை இறைவனின் கொடை, இது ஒருவர் ஒருவரை வளப்படுத்தும் என்றும் கூறினார்.
உரோமையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள La Civiltà Cattolica இதழின் முதல் பிரதி 1850ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வெளியானது. தற்போது ஒவ்வொரு முறையும் 15 ஆயிரம் பிரதிநிதிகள் விநியோகிக்கப்படுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.