2013-06-13 17:11:26

நாவடக்கம் என்பது மிக எளிதான, அதேவேளை, மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு புண்ணியம் - திருத்தந்தை


ஜூன்,13,2013. நமது நாவிலிருந்து பிறக்கும் சொற்கள் மீது கவனம் தேவை, ஏனெனில், மற்றவர்களைப் புகழ்ந்து, நல்லவற்றை விளைவிக்கும் சொற்களைவிட, அவர்களை இழிவுபடுத்தும் சொற்களே நமது நாவிலிருந்து வெளிவருகின்றன என்ற எச்சரிக்கையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், "மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற மத்தேயு நற்செய்தி வரிகளை மையப்படுத்தி திருத்தந்தை மறையுரையாற்றினார்.
இத்திருப்பலியை, அர்ஜென்டீனா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் ஊழியர்களுக்கும் இஸ்பானிய மொழியில் திருத்தந்தை ஆற்றினார்.
பிப்ரவரி 26ம் தேதிக்குப்பின் தற்போதுதான் இஸ்பானிய மொழியில் தான் திருப்பலியாற்றுவதாகக் கூறிய திருத்தந்தை, இந்த வாய்ப்பு தனக்கு மகிழ்வைத் தருவதாகவும் எடுத்துரைத்தார்.
மற்றவர்களை 'முட்டாளே', 'அறிவிலியே' என்ற சொற்களால் அழைப்பதைக் கண்டனம் செய்துள்ள இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நல்லதோர் எச்சரிக்கையாக அமைந்துள்ளன என்று கூறியத் திருத்தந்தை, முழுமையான மனவளர்ச்சி அடைய மறுப்பவர்களே மற்றவர்களை இழிவுபடுத்தும் மொழியைப் பயன்படுத்துகின்றனர் என்று தெளிவுபடுத்தினார்.
நமக்குள் எழும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது மிகவும் கடினம் என்பதால், பல நேரங்களில் நாம், பிறரைக் குற்றம் சொல்லுதல், பிறரை இழிவுபடுத்துதல் ஆகிய மிக எளிய வழிகளைப் பின்பற்றி, பின்னர் மனம் வருந்துகிறோம் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நாவடக்கம் என்பது மிக எளிதான, அதேவேளை, மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு புண்ணியம் என்று கூறியத் திருத்தந்தை, இந்தப் புண்ணியத்தில் நாம் அனைவரும் வளர இறைவனிடம் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகக் கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.