நம்பிக்கை ஆண்டின் சுற்றுமடல்நவம்பர் மாதத்திற்கள் வெளிவரும் - திருத்தந்தை
ஜூன்,13,2013. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் மையக்கருத்தான,
"நம்பிக்கையை பரப்புவதற்கு, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி" என்பதன் முக்கியத்துவத்தை
வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். நடைபெறும்
நம்பிக்கை ஆண்டின் துவக்க நிகழ்வாக வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு
தொடர்ச்சியாக, இவ்வாரம் வத்திக்கானில் 25 ஆயர்கள் ஒன்றுகூடி, அடுத்த ஒரு வாரத்திற்கு
விவாதங்கள் மேற்கொள்ளவிருக்கின்றனர். ஆயர்கள் மாமன்ற பொதுச்செயலர் பேராயர் Nikola
Eterovic தலைமையில் கூடியுள்ள இந்த ஆயர்கள் குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் நடைபெறும் கூட்டத்திற்கு தன் சிறப்பான வாழ்த்துக்களையும்,
ஆசீரையும் வழங்கினார். தான் எழுதிவைத்திருந்த உரையை ஆயர்களிடம் வாசிக்காமல், அவர்களுடன்
ஓர் உரையாடலில் ஈடுபட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நம்பிக்கை ஆண்டுக்குரிய
சுற்றுமடலின் முதல் வரைவை முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களிடமிருந்து தான் பெற்றுள்ளதாகவும்,
அதில் மிக ஆழமான இறையியல் எண்ணங்கள் பொதிந்துள்ளதாகவும் கூறினார். முன்னாள் திருத்தந்தை
வழங்கியுள்ள இந்த எண்ணங்களுடன் தன் எண்ணங்களை இணைத்து, இந்த ஆகஸ்ட் மாதம் தான் சுற்றுமடலை
உருவாக்க உள்ளதாகவும், இவ்விரு திருத்தந்தையரின் முயற்சிகளின் தொகுப்பாக வெளிவரும் சுற்றுமடல்,
நம்பிக்கை ஆண்டின் இறுதிக்குள் வெளிவரும் என்றும் திருத்தந்தை, கூடியிருந்த ஆயர்களிடம்
கூறினார். நற்செய்தியை அறிவிப்பதற்கு நம்மிடம் பல புதிய கருவிகள் வளர்ந்திருப்பது
நல்லதொரு முன்னேற்றம் என்றாலும், நற்செய்தியின் நாயகனான இயேசுவைப் புறம்தள்ளிவிட்டு,
இக்கருவிகள் முதலிடம் பெறமுடியாது என்பதை உணரவேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார். இவ்வாரம்
நடைபெறும் ஆயர்கள் கூட்டம் அடுத்த ஆயர்கள் மாமன்றத்தின் மையக் கருத்தைத் தீர்மானிக்கும்
என்பதால், அவர்களின் விவாதங்களை தூயஆவியாரும் அன்னை மரியாவும் வழிநடத்த வேண்டுமென்ற விருப்பத்துடன்,
திருத்தந்தை அங்கிருந்தோர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.