2013-06-13 09:16:02

அன்னைமரியா திருத்தலங்கள் – Meritxell அன்னைமரியாதிருத்தலம்
(Our Lady of Meritxell, Andorra)


ஜூன்,12,2013. Andorra, தென்மேற்கு ஐரோப்பாவில், இஸ்பெயின் மற்றும் பிரான்சை எல்லைகளாகக் கொண்டுள்ள ஒரு குட்டி நாடாகும். ஐரோப்பாவிலுள்ள ஆறாவது சிறிய நாடாக, 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இது கொண்டுள்ளது. 2012ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி இந்நாட்டின் மக்கள்தொகை 85 ஆயிரம். இந்நாட்டின் தலைநகராகிய Andorra la Vella, ஐரோப்பாவிலே உயரமான இடத்தில் அமைந்துள்ள தலைநகராக உள்ளது. கடல்மட்டத்தைவிட 1,023 மீட்டர் உயரத்தில் உள்ள இந்நகர், இஸ்பெயினின் பார்செலோனாவுக்கு வடக்கே ஏறக்குறைய 125 மைல் தூரத்தில் உள்ளது. கிழக்கு Pyrenees மலைகளில் அமைந்துள்ள இந்த Andorra நாட்டில் இஸ்பானியம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிகள் பொதுவாகப் பேசப்பட்டாலும், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி Catalan என்பதாகும். 988ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின்மூலம், முடியாட்சி போன்ற ஓர் அமைப்பு இந்நாட்டில் உள்ளது. இந்நாட்டை Urgell ஆயரும், ப்ரெஞ்ச் அரசுத்தலைவரும் தலைமை வகித்து நடத்துகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இந்நாட்டுக்குச் செல்வதால் வளமையான நாடாகவும் இது உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஒரு கோடியே 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் Andorraசெல்கின்றனர்.
Andorraஒரு கத்தோலிக்க நாடாகும். அதனால் இந்நாட்டின் முக்கிய கொண்டாட்டங்கள், முக்கியமான புனிதர்களின் விழாக்களைக் கொண்டாடுவதாக இருக்கின்றன. இவ்விழாக்களில் புனித ஜார்ஜ் தினம், புனித யோவான் தினம், புனித ஸ்தேவான் தினம், புனித லூசியா தினம் போன்றவை முக்கியமானவை. இவ்விழாக்களில் ஒன்றில் பங்கெடுத்தால் இந்நாட்டு மக்களின் வாழ்வு குறித்து அறிந்து கொள்ளலாம். Andorra நாட்டுக்குச் செப்டம்பர் 8 தேசிய விடுமுறை நாள். அந்நாள் நாட்டின் சுதந்திர தினமும் ஆகும். இந்தத் தேசிய விடுமுறை நாளில் பெருந்திரளான மக்கள் Meritxell அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் Meritxell அன்னைமரியா Andorraவின் பாதுகாவலியாவார். Meritxell அன்னைமரியாவின் வரலாறு 12ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. Merig என்ற பெயரே "Meritxell" என்று பெயர் பெற்றது என Catalan மெய்யியலாளர் Joan Coromines விளக்குகிறார். மிகுந்த சூரிய ஒளியில் ஒரு பசும் புல்வெளியை குறிப்பதற்காக இடையர்கள் Merigஎன்ற சொல்லைப் பயன்படுத்தினர். இதற்கு ஆங்கிலத்தில் நண்பகல் என்று பொருள்.
12ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சனவரி 6ம் தேதியன்று Andorraவின் Meritxell கிராம மக்கள் Canillo என்ற நகரத்துக்குத் திருப்பலி காண்பதற்காகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டு ரோஜா சாலையோரத்தில் பூத்திருப்பதை மக்கள் பார்த்தனர். அது குளிர்காலம். அக்காலத்தில் ரோஜா மலர் பூப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் இந்த ரோஜாவைப் பார்த்ததும் மக்கள் அது பூத்திருந்த புதர் அருகே சென்றனர். அச்செடியின் அடியில் ஓர் அன்னைமரியா திருவுருவத்தைப் பார்த்தனர். அன்னைமரியா குழந்தை இயேசுவை வைத்திருப்பதுபோன்ற திருவுருவம் அது. Meritxell கிராம மக்கள் அந்த அன்னைமரியா திருவுருவத்தை எடுத்து Canilloவிலிருந்த ஆலயத்தில் வைத்தனர். அதற்கு அடுத்த நாள் அந்த அன்னைமரியா திருவுருவத்தை Canillo ஆலயத்தில் காணவில்லை. ஆனால் அது, அந்த காட்டுரோஜா பூத்திருந்த அதே இடத்தில் இருந்தது. மீண்டும் அம்மக்கள் திருவுருவத்தை எடுத்து Canilloவிலிருந்த ஆலயத்தில் வைத்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாளும் அந்த அன்னைமரியா திருவுருவத்தை Canillo ஆலயத்தில் காணவில்லை. ஆனால் அது, அந்த காட்டுரோஜா பூத்திருந்த அதே இடத்தில் இருந்தது.
எனவே Meritxell கிராம மக்கள் இதனை ஓர் அடையாளமாக எடுத்துக்கொண்டு தங்களது சொந்த ஊரில் ஒரு புதிய ஆலயம் கட்டுவதற்குத் தீர்மானித்தனர். அது குளிர் காலமாகவும் பனி பெய்து கொண்டும் இருந்தது. ஆயினும், பனி பெய்யாத ஒரு திறந்த வெளியை புதுமையாக அம்மக்கள் கண்டனர். அவ்விடத்தில் அன்னைமரியாவுக்கு ஓர் ஆலயம் கட்டி, அத்திருவுருவத்தை அங்கு வைத்தனர். இத்தேவதாய், Meritxell அன்னைமரியா என்று அழைக்கப்பட்டு மக்களால் மிகுந்த வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறார். ஆயினும், 1972ம் ஆண்டு செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இவ்வாலயம் தீயினால் முழுவதும் அழிந்தது. அன்னைமரியா திருவுருவமும் சேதமடைந்தது. மீண்டும் 1976ம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. அதே மாதிரியான அன்னைமரியா திருவுருவம் Ricardo Bofill என்பவரால் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டது.
செப்டம்பர் 8ம் தேதி அன்னைமரியாவின் பிறப்பு விழா. அன்றுதான் நாம் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னையின் விழாவைச் சிறப்பிக்கிறோம். இதே நாளில்தான் Andorra நாட்டு மக்களும் Meritxell அன்னைமரியா விழாவைச் சிறப்பிக்கின்றனர் அந்நாட்டு மக்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதி Meritxell அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொள்வதை ஒரு வழக்கமாகவும் கொண்டிருக்கின்றனர். இயேசுவின் தாயாம் அன்னைமரியா ஒவ்வொரு நாட்டிலும் காட்சிக் கொடுத்து தனது மகன் இயேசுவின் பெருமையைப் பறைசாற்றி வருகிறார். அன்று காணாவூர் திருமணத்தில் செய்தது போல இயேசுவிடம் நமக்காகப் பரிந்துபேசி தீராத நோய்களைக் குணமாக்குகிறார், மக்கள் பலரின் உடல் நோயையும் உள்ள நோயையும் குணமாக்குகிறார். நம் கவலைகளை அகற்றி மனதுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறார். அன்னைமரியாவை நம்பிக்கையுடன் நாமும் நாடிச் செல்வோம்.








All the contents on this site are copyrighted ©.