2013-06-13 17:20:05

அனைத்துலக குழந்தைத்தொழில் எதிர்ப்பு நாளையொட்டி, இந்திய நகரங்களில் பல்லாயிரம் குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டங்கள்


ஜூன்,13,2013. ஜூன் 12, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக குழந்தைத்தொழில் எதிர்ப்பு நாளையொட்டி, இந்தியாவின் டில்லி, ராஞ்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் பல்லாயிரம் குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டங்கள் நடைபெற்றன.
புது டில்லியில் அமைந்துள்ள இந்தியா வாசலுக்கு எதிராகக் கூடியிருந்த குழந்தைகள், குழந்தைத்தொழிலுக்கு எதிராக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தாங்கிய விளம்பர அட்டைகளைத் தாங்கி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் குழந்தைத்தொழில் எதிர்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் அருள் பணியாளர் Rajan Punnakal, புது டில்லியின் நிகழ்வுகளை முன்னின்று நடத்தினார்.
குழந்தைத்தொழிலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் அதேவேளையில், ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை என்பதையும் வலியுறுத்தி வருகிறோம் என்று அருள் பணியாளர் Punnakal, UCAN செய்தியிடம் கூறினார்.
ராஞ்சியில், 'குழந்தைத்தொழிலுக்கு எதிரான ஓட்டம்' என்ற ஓட்டப்பந்தய நிகழ்வில் 3000க்கும் அதிகமான குழந்தைகள் கலந்துகொண்டனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தியாவில் தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்படும் குழந்தைகள் 50 இலட்சம் பேர் என்றும், இவர்களில் 17 இலட்சம் குழந்தைகள் உத்தரகாந்து மாநிலத்திலிருந்தும், 5 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் மேற்கு வங்காளத்திலிருந்தும், 4 இலட்சம் குழந்தைகள் இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள குழந்தைகள் என்று நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பு அறிவித்துள்ளது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.