2013-06-12 16:10:53

மாற்றங்களுக்குப் பயந்து பாதுகாப்பான பழமையை நாடுவது, நமக்கு எழுந்துள்ள சோதனை - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,12,2013. பாதுகாப்பு கருதி, மாற்றங்களுக்குப் பயந்து முன்னோக்கிச் செல்வதற்குத் தயங்குவதோ, அல்லது, வளர் இளம் பருவத்தினரைப் போல, வெகு விரைவாக மாற்றங்கள் நிகழவேண்டும் என்ற ஆவல் கொள்வதோ கிறிஸ்தவ நம்பிக்கையை வளர்க்காது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதன் காலையில் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில், மத்தேயு நற்செய்தியில் காணப்படும் "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ணவேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்" (மத்தேயு 5:17) என்ற இயேசுவின் வார்த்தைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
மலைப்பொழிவில் இயேசு வழங்கிய 'பேறுபெற்றோர்' என்ற மொழிகள் மாற்றத்தை, புதுமையை மக்கள் மனங்களில் விளைத்தது என்று கூறியத் திருத்தந்தை, இந்த 'பேறுபெற்றோர்' வார்த்தைகளைத் தொடர்ந்து, இயேசு கூறும் இன்றையச் சொற்கள் நம்மை மாற்றம் நோக்கி அழைக்கின்றன என்று எடுத்துரைத்தார்.
1930களில் வாழ்ந்த ஒரு துறவுசபை உயர் தலைவர், தன் சபையில் மாற்றங்களைக் கொணர விழைந்து, பல்வேறு துறவுச் சபைகளில் பயன்படுத்தப்படும் சட்டங்களைத் திரட்டினார் என்றும், பல ஆண்டுகள் அவர் செய்த இந்தப் பணியின் இறுதியில் அவர் ஒரு துறவியைச் சந்தித்து, தன் முயற்சிகள் பற்றி கூறியபோது, அவரோ, "நீங்கள் உங்கள் சபையின் உண்மையான அருள்கொடைகளைக் கொன்றுவிட்டீர்கள்" என்று சொன்னதையும் திருத்தந்தை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.
மாற்றங்களுக்குப் பயந்து பாதுகாப்பான பழமையை நாடுவதும், அல்லது, அதற்கு மாறாக, உடனடியான, அரைகுறையான மாற்றங்களைக் கொணர வளர் இளம் பருவத்தினரைப் போல அவசரப்படுவதும் நமக்கு எழுந்துள்ள சோதனைகள் என்றும், இவ்விரு சோதனைகளும் நிலையான மாற்றங்களைக் கொணராது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
இப்புதனன்று புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்ந்த இத்திருப்பலியில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு அமைப்புக்களுக்கான திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் João Braz de Aviz அவர்கள், திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியாற்ற, இப்பேராயத்தின் ஊழியர்கள் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.