ஜூன்,12,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை
குறித்து தன் புதன் மறைபோதகங்களில் வழங்கி வந்ததை, தன் பாப்பிறை பதவியின் துவக்க காலத்திலிருந்தே
புதன்கிழமைகளில் தானும் தொடர்ந்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ், கடந்த வாரம் புதனன்று
சிறப்பிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் நாள் குறித்து தன் கருத்துக்களை அந்நாளில் பகிர்ந்து
கொண்டார். இவ்வாரம் மீண்டும் விசுவாச அறிக்கையின் வரிகளை மையப்படுத்தி, தன் மறைபோதகத்தை
வழங்கினார். 'கிறிஸ்துவில் புதிய வாழ்வுக்கு அழைக்கப்பட்ட இறைமக்கள் குலமே திருச்சபை'
என்பதை மையமாக வைத்து திருத்தந்தையின் இப்புதன் மறையுரை இருந்தது. திருமுழுக்குத் தண்ணீரில்
நாம் பெற்ற ஆன்மீக மறுபிறப்பு, மற்றும், இறைவன் வழங்கிய விசுவாசக்கொடை ஆகியவற்றின் மூலம்
நாம் இந்த இறைமக்கள் குலத்தின் பகுதியாக மாறுகிறோம். நமக்கு வழங்கப்பட்டுள்ள சட்டம் என்பது,
கடவுளையும் அயலாரையும் அன்புசெய்வதற்கு இடப்பட்ட இரட்டைக் கட்டளையாகும். நமது பணி என்பது,
தீமையாலும் பாவத்தாலும் காயப்பட்ட நம் உலகில், இறைஅன்பிலிருந்து பிறந்த நம்பிக்கையின்
புளிக்காரமாகச் செயல்படுவதாகும். நம்மை அடிக்கடிச் சூழும் இருளின் மத்தியில், வளமையான
வருங்காலத்தின் பாதையை காண்பிக்கவும், உண்மை நிலைகளை ஒளிர்விக்கவும் உகந்த பல்வேறு ஒளித்தலங்களாகச்
செயல்பட நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளின் நன்மைத்தனம் எந்த்த் தீமையையும் விட
வலிமையுடையது. இவ்வுலகில் கிறிஸ்துவால் துவக்கப்பட்டு, விண்ணுலக மகிழ்வில் தன் முழுமையை
அடைய உள்ள இறைவனின் அரசே நம் பயண இலக்கு. இறைமக்கள் குலமாக திருச்சபை உள்ளது என்பதன்
அர்த்தம் இதுவே. இதுவே, மனிதகுலத்திற்கு இறைவன் தந்துள்ள அன்புத் திட்டத்தின் முக்கியப்
பகுதி. நற்செய்தி காட்டும் நல்வாழ்வை வாழ ஊக்கம் பெறவும், மன்னிப்பையும் அன்பையும், வரவேற்பையும்
உணரவும், இறைஇரக்கத்தைச் சந்திக்கவும் உதவும் இடமாக திருஅவை ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்
என ஆவல் கொள்கின்றேன். இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும்
தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.