2013-06-12 16:52:24

குழந்தைத் தொழில் எதிர்ப்பு நாளில் திருத்தந்தையின் விண்ணப்பம்


ஜூன்,12,2013. ஜூன் 12ம் தேதி இப்புதனன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட குழந்தைத் தொழில் எதிர்ப்பு நாள் குறித்தும் தன் கருத்துக்களை முன்வைத்து, விண்ணப்பம் ஒன்றையும், புதன் மறைபோதகத்தின் இறுதியில் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குழந்தைத் தொழிலாளர், பணித்தளங்களில் சுரண்டப்படுவது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, அதிலும் குறிப்பாக ஏழைநாடுகளில், என்று கூறியத் திருத்தந்தை, பல இலட்சக்கணக்கான குழ்ந்தைகள் இத்தகைய கொடுமைகளில் துன்புறுவது குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இத்தகையை மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைக் களைவதற்கு அனைத்துலக சமுதாயம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.
அனைத்துக் குழந்தைகளும் அன்பும், அமைதியும், இணக்கமும் நிறைந்த சூழலில் தங்கள் குடும்பங்களிலேயே வாழவும், படிக்கவும், விளையாடவும், செபிக்கவும், வளரவும் இயைந்தச் சூழலை உருவாக்கித் தரவேண்டும். இது அவர்களின் உரிமையும் நமது கடமையும் கூட. மகிழ்ச்சியான குழந்தைப்பருவமே அவர்களை நம்பிக்கையுடன் வருங்காலத்தை நோக்க உதவும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ், குழ்ந்தைகளின் மகிழ்ச்சியுடன்கூடிய நம்பிக்கைகளை கொள்ளையடிப்பவர்களுக்கு ஐயோ கேடு, என்று கூறி தன் புதன் மறைபோதகத்தை நிறைவுச் செய்தார்.
இதேநாளில் தன் டுவிட்டர் பக்கத்தில்,' 'இறைவனை மறுத்து அவருக்குரிய இடத்தில் பல்வேறு வழிபாட்டுச் சிலைகளை வைப்பதன் மூலம் எத்தகைய நன்னெறிச்சார்ந்த மற்றும் பொருளாதார ஏழ்மை நிலைகளை இன்று எதிர்நோக்குகிறோம்?' என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.