2013-06-10 16:49:33

Loreto வுக்குத் திருப்பயணம் மேற்கொண்டிருந்த ஒரு இலட்சம் இளையோருக்கு திருத்தந்தையின் தொலைபேசி வாழ்த்து


ஜூன்,10,2013. நம் உலக வாழ்வு ஒரு பயணம் என்பதை நீங்கள் மேற்கொண்டுள்ள திருப்பயணம் உணர்த்துகிறது, இப்பயணத்தில் கிறிஸ்துவைச் சந்திப்பதும், அவரால் வழிநடத்தப்படுவதுமே நமது வாழ்வின் முக்கிய இலக்கு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமையன்று இத்தாலியின் Macerata எனுமிடத்திலிருந்து, மரியன்னையின் முக்கியத் திருத்தலங்களில் ஒன்றான Loretoவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டிருந்த ஒரு இலட்சம் இளையோருக்கு, தொலைபேசி வழியே தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
1978ம் ஆண்டு 300 பேராக ஆரம்பித்த இந்த முயற்சி, இன்று ஒரு இலட்சம் இளையோரைச் சேர்த்திருப்பது இறைவனின் செயல் அன்றி வேறு எதுவும் அல்ல என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தொலைபேசி செய்தியில் வலியுறுத்தினார்.
இத்திருப்பயணத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்த கர்தினால் Marc Ouellet அவர்கள், பிறந்தநாள் கொண்டாடியதை நினைவுகூர்ந்து, அவருக்கு முதலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
28 கிலோமீட்டர் நீளமான இந்த நடைபயணம் Macerata வில் உள்ள Helvia Recina என்ற விளையாட்டுத்திடலில் ஆரம்பமாகி, இரவு முழுவதும் பாடல்கள், செபமாலை ஆகியவற்றால் நிறைந்த நடைபயணமாக இருந்தது. ஞாயிறு காலை Loreto அடைந்த இந்த இளையோர் குழுவுக்கு கர்தினால் Ouellet திருப்பலி நிகழ்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.