2013-06-08 16:21:30

வன்முறையற்ற, அகிம்சை வழிகள் மூலமே, நிரந்தரமான அமைதியைப் பெறமுடியும் - பேராயர் சில்வானோ தொமாசி


ஜூன்,08,2013. மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் முதன்மை இடம் பெறுவது அமைதி, இந்த அமைதி இல்லாதபோது மற்ற உரிமைகளையும் மனிதர்கள் இழக்கவேண்டி உள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் செயல்படும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, ஐ.நா. மனித உரிமைகள் குறித்த 23வது அமர்வில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
போர்களற்ற சூழலை அமைதிச் சூழல் என்று சொல்வது அமைதியின் மிகக் குறைவான நிலையே தவிர அது, உண்மையான அமைதி அல்ல, அமைதி என்பது ஒவ்வொரு நாளும் குடும்பங்களில், பள்ளிகளில் பொது இடங்களில் நிலவும் பாதுகாப்பான நிலை என்று பேராயர் தொமாசி விளக்கினார்.
போர்களின் வழியாக நாம் நிரந்தரத் தீர்வுகளையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்பது தவறான ஓர் எண்ணம் என்று கூறிய பேராயர் தொமாசி, உண்மையான மனித மாண்பின் அடிப்படையில் மட்டுமே மனித உரிமைகளையும், அமைதியையும் கட்டியெழுப்ப முடியும் என்று வலியுறுத்தினார்.
வன்முறையற்ற, அகிம்சை வழிகள் மூலமே, நிரந்தரமான அமைதியைப் பெறமுடியும் என்பதை வலராறு நமக்குக் கற்பித்துள்ளது, எனவே வன்முறைகளை கைவிட்டு, அமைதி வழிகளைத் தேடுவது மனித குலத்தின் உடனடித் தேவை என்று பேராயர் தொமாசி எடுத்துரைத்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.