2013-06-08 16:20:56

திருத்தந்தை : இறைவார்த்தையை சிந்தைகளில் தினமும் பேணி பாதுகாத்து வாருங்கள்


ஜூன்,08,2013. இறைவார்த்தை நம் மனங்களில் விதைக்கப்படும்போது நாம் பெறும் மகிழ்வும் ஆச்சரியமும் அங்கேயே பாதுகாக்கப்பட வேண்டியவை அல்ல, மாறாக அன்னை மரியைப்போல் நம் வாழ்வு நடவடிக்கைகளில் வெளிப்படுத்தப்பட வேண்டியவை என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லத்தின் கோவிலில் இச்சனிக்கிழமை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, அன்னை மரியா, இறைவனின் வார்த்தைகளை மனதிற்குள் வைத்து தியானித்து வந்தார் என்பது அவ்வார்த்தைகளை ஒரு குப்பிக்குள் போட்டு அடைத்து வைப்பது போன்றதாகாது, மாறாக அதற்கென தன்னை திறப்பதையும் அதனை நினைவில் பேணுவதையும் குறிக்கும் என்றார்.
இறைவார்த்தை நம் மனங்களில் விதைக்கப்படும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து, இயேசுவின் 'விதைப்பவர் உவமை' பற்றிய விளக்கத்துடன் எடுத்துரைத்த திருத்தந்தை, கடவுள் நம் வாழ்வில் ஆற்றியுள்ள நன்மைத்தனங்கள் குறித்து சிந்திக்கவும், அது குறித்த நம் நினைவுகளைத் தூண்டவும் நம் இதயத்தில் தங்கியிருக்கும் இறைவார்த்தை உதவுகிறது என்றார்.
பெறப்பட்ட இறைவார்த்தையை மூடிப்பாதுகாப்பதை அல்ல, மாறாக, நம் சிந்தைகளில் தினமும் பேணி, நம்பிக்கையால் அதனைப் பாதுகாப்பதே எதிர்பார்க்கப்படுகின்றது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.