2013-06-08 16:35:43

17 விழுக்காட்டு நகர்ப்புற இந்தியர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு : ஆய்வில் தகவல்


ஜூன்,08,2013. நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்களில் நூறில் 17 பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு அல்லது சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருப்பதாக அண்மை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 6 விழுக்காட்டினர், மூன்றாம் நிலை சிறுநீரக நோய்க்கு ஆளாகி உள்ளதாகவும், இவர்கள் கட்டாய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையிலும், மேலும் சிலர், அதிகம் செலவாகும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை பெற வேண்டிய நிலையிலும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 12 நகரங்களில் உள்ள 13 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோய்கள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டதில், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வாழும் நூறு பேரில் 17 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு இந்தியாவில் 1,75,000 சிறுநீரகங்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது 4000 மாற்றுச் சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.