2013-06-07 16:34:58

இயேசு சபையினர் நடத்தும் பள்ளிகளிலிருந்து வந்திருந்த 8000க்கும் அதிகமான மாணவர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஜூன்,07,2013. இத்தாலியின் மிலான், டூரின், பலேர்மோ, நேபிள்ஸ், நகரங்கள் உட்பட பல நகரங்களிலிருந்தும், ஆல்பேனியா நாட்டிலிருந்தும் 8000க்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளிக்கிழமை மதியம் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பையொட்டி, திருத்தந்தைக்கு மாணவர்கள் எழுதியிருந்த 3000க்கும் அதிகமான மடல்களிலிருந்து, ஒரு சில கடிதங்கள் இச்சந்திப்பின் துவக்கத்தில் வாசிக்கப்பட்டன.
தான் தயாரித்து வைத்திருந்த உரையை சுருக்கமாகப் பகிர்ந்தபின், குழந்தைகள், ஆசிரியர்கள் எழுப்பிய ஒரு சில கேள்விகளுக்கு நேரடியாக, மனதில் இருந்து எழுந்த வார்த்தைகள் கொண்டு திருத்தந்தை பதில் அளித்தார்.
Asti என்ற ஊரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த இல்லம், மறைந்த மிலான் பேராயர், கர்தினால் மார்த்தினி அவர்களிடம் இருந்த புனித அம்புரோஸ் உருவப்படம், வழித்துணை அன்னை மரியாவின் படம் ஆகிய வெவ்வேறு படங்கள் திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்டன.
இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன் திரட்டப்பட்ட நிதி ஒன்றும் அவரிடம் அளிக்கப்பட்டது. ஏறத்தாழ ஒருமணி நேரம் நீடித்த இச்சந்திப்பு முழுவதும், வத்திக்கான் தொலைக்காட்சி நிலையத்தினரால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.