2013-06-06 16:22:17

புனித பேதுருவின் பணிகளை ஏற்போருக்கு முதன்மையாகத் தேவைப்படுவது உள்மன விடுதலை - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,06,2013. புனித பேதுருவின் பணிகளில் முக்கியப் பொறுப்புக்களை ஏற்கவிருக்கும் உங்களுக்கு முதன்மையாகத் தேவைப்படுவது உள்மன விடுதலை என்று திருப்பீட திருஅவை கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இந்நிறுவனத்தைச் சேர்ந்த 45 உறுப்பினர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் மேன்மையான பணிகளில் ஈடுபட்டிருப்போர் கொண்டிருக்கவேண்டிய உள்மன விடுதலையைக் குறித்து விளக்கினார்.
இப்பணிகளில் ஈடுபடுவோர் தங்களது தனிமனித முன்னேற்றத்தை முன்னிறுத்தி, அதற்கென தங்களையே தயாரிப்பதில் அதிக நேரம் செலவிடுவதை விடுத்து, திருஅவையின் தேவைகள் எங்கு அவர்களை அழைக்கிறதோ அங்கு சென்று பணியாற்றும் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பணியாளர்கள் வளர்க்க வேண்டிய உள்மன விடுதலை, அவர்களது ஆன்மீக வாழ்விலிருந்து பிறக்க வேண்டும் என்பதையும், ஒவ்வொருநாள் பணிகளையும், செபத்தையும் இணைக்கும் கலையை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக் காட்டினார்.
ஒரு சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்ட, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் மறைவின் 50ம் ஆண்டு நினைவைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் திருஅவையின் மென்மையான, முக்கியமான பணிகளில் தன் புனிதத்துவத்தை வெளியிட்டார் என்று கூறினார்.
இந்தக் கல்வி நிறுவனத்தின் ஒவ்வொரு நாள் தேவைகளையும் நிறைவு செய்யும் பிரான்சிஸ்கன் துறவுச் சபை அருள் சகோதரிகளைக் குறித்து தன் உரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ், முழு ஈடுபாட்டுடன் தங்கள் பணிகளை ஆற்றும் சகோதரிகள் வழியே எளிமை, அர்ப்பணம், அன்பு ஆகிய உயர்ந்த பண்புகளை நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.