2013-06-06 16:27:44

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பிரான்சிஸ் போலவே இயற்கை மீது அக்கறை கொண்டவர் - Baha'i சமுதாயத்தின் தலைவர்


ஜூன்,06,2013. தான் தேர்ந்தெடுத்துள்ள 'பிரான்சிஸ்' என்ற பெயர் வழியாகவும், தனது உரைகள் வழியாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பிரான்சிஸ் போலவே இயற்கை மீது அக்கறை கொண்டவர் என்பதைக் காண முடிகிறது என்று இந்திய சமயத் தலைவர் ஒருவர் கூறினார்.
ஜூன் 5, இப்புதனன்று கொண்டாடப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி வழங்கிய புதன் பொது மறைப்போதகத்தில், இயற்கை மீது நாம் கொள்ளவேண்டிய அக்கறை குறித்து திருத்தந்தை பேசியது தன்னை மிகவும் கவர்ந்தது என்று Baha'i சமுதாயத்தின் தலைவரான A.K. Merchant கூறினார்.
கடந்த மூன்று மாதங்களாக திருத்தந்தை ஆற்றிய உரைகளும், அவர் மேற்கொள்ளும் செயல்களும் அவரை ஓர் உயர்ந்த ஆன்மீகத் தலைவராகக் காட்டுகிறது என்று, இந்தியாவில் உள்ள தாமரைக் கோவில் அறக்கட்டளையின் உறுப்பினராக உள்ள Merchant அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
ஏழைகள் மட்டிலும் இயற்கையின் மீதும் அக்கறை கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை தொடர்ந்து கூறி வருவது Baha'i குடும்பத்தினரின் கொள்கைகளை பிரதிபலிப்பதாய் உள்ளது என்று Merchant அவர்கள் கூறினார்.
கடந்த ஆண்டு அசிசி நகரில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமையில் நடைபெற்ற அனைத்து மதங்களின் பொது வழிபாட்டில், Baha'i குழுமத்தின் சார்பில் Merchant அவர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.