2013-06-06 16:28:09

ஒவ்வோர் ஆண்டும் 15 இலட்சம் குழந்தைகள் உணவு பற்றாக்குறையால் இறக்கின்றனர் - Lancet மருத்துவ இதழின் அதிர்ச்சித் தகவல்


ஜூன்,06,2013. உலகில் ஒவ்வோர் ஆண்டும் இறக்கும் 31 இலட்சம் குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், இவர்களில் 45 விழுக்காட்டினர் உணவு பற்றாக்குறையால் இறக்கின்றனர் என்றும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை Lancet என்ற மருத்துவ இதழ் இவ்வியாழனன்று வெளியிட்டது.
உணவு பற்றாக்குறையால் இறக்கும் இக்குழந்தைகளில் பெரும்பாலானோர் ஆப்ரிக்க, ஆசிய கண்டங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் Lancet அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், உணவு பற்றாக்குறையால், 1 கோடியே, 65 இலட்சம் குழந்தைகள் சரியான வளர்ச்சியின்றி உள்ளனர் என்ற தகவலையும் Lancet இதழ் வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 17ம் தேதி G8 நாடுகளின் தலைவர்கள் நடத்தவிருக்கும் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, ஜூன் 8, 9 ஆகிய நாட்கள் உலக உணவுக்கென நிதி ஒதுக்கீடு செய்யும் மற்றோரு கூட்டம் பிரித்தானியாவில் நடைபெற உள்ளது.
வளம் மிகுந்த நாடுகள் நடத்தும் இந்தக் கூட்டங்களுக்கு முன்னதாக, Lancet வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சித் தகவல்கள், உலக மக்கள் பசியைத் தீர்க்கும் முடிவுகளை எடுக்க தலைவர்களைத் தூண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகப் பசியைத் தீர்க்க ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி டாலர்கள் தேவை என்ற நிலை இருக்க, உலக அரசுகள் தற்போது 60 கோடி முதல் 80 கோடி டாலர்களையே ஒதுக்கி வருகின்றன என்று 200க்கும் அதிகமான அரசு சாரா அமைப்புக்கள் கூறி வருகின்றன.

ஆதாரம் : The Guardian








All the contents on this site are copyrighted ©.