2013-06-05 16:56:14

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஜூன்,05,2013. கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து தன் மறைபோதகங்களில் தொடர்ந்து பேசி வந்த திருத்தந்தை பிரான்சிஸ், கடந்த வாரம் 'திருஅவை இறைவனின் குடும்பம்' என்ற தலைப்பில் தன் போதனைகளை வழங்கினார். இப்புதனன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாள் குறித்து இவ்வார மறைபோதகத்தில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
அன்பு சகோதர சகோதரிகளே, இன்றையை நம் மறைபோதகம் உலகச் சுற்றுச்சூழல் நாளன்று இடம்பெறுகிறது. இறைவனின் கட்டளைகளுக்கு இயைந்தவகையில் நாம் எவ்வாறு இந்த பூமி மீது அக்கறை கொண்டுள்ளோம், இப்பூமியை உழுது பயிரிடுவதில் நம் பொறுப்புணர்வுகள் என்ன என்பது குறித்து இந்நாளில் சிந்திப்பது மிகவும் பொருத்தமுடையதாக இருக்கும். இயற்கைச் சுற்றுச்சூழலை மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் நாம் அழைக்கப்படவில்லை, அதேவேளை மனித குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களோடு ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்கவும், அவர்களுக்குரிய மதிப்பைக் காட்டவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். இவை இரண்டும் மிக நெருங்கியத் தொடர்புடையவை. இன்று நாம் சந்தித்துவரும் நெருக்கடி நிலைகளுக்கு காரணம்,பொருளாதார வளங்களைச் சரியான முறையில் நிர்வகிக்காதது மட்டுமல்ல, மனித வளங்கள் மீதான நம் அக்கறைக் குறித்தது, மற்றும், மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் நம் சகோதர சகோதரிகளின் தேவை குறித்தது, குறிப்பாக போதிய கல்வி, நல ஆதரவு மற்றும் சத்துணவின்றி வாடும் எண்ணற்ற குழந்தைகள் குறித்ததுமாகும்.
இன்று அதிகாரத்தைக் கொண்டிருப்பது மனிதனல்ல, மாறாக, பணம். கடவுள் பணத்திடம் இவ்வுலகை ஒப்படைக்கவில்லை, மாறாக, நம்மிடம்தான் ஒப்படைத்தார். இன்றைய உலகில் ஆண்களும் பெண்களும் நுகர்வுக்கலாச்சாரத்திற்காக, இலாபத்திற்காக தியாகம் செய்யப்படுகிறார்கள். அருகாமையில் உள்ள ஒரு தெருவில் ஒருவர் குளிரில் வாடி இறந்தால் அது நமக்குச் செய்தியல்ல. உலகின் பல பகுதிகளில் உணவின்றி குழந்தைகள் வாடினால் அதுவும் செய்தியாவதில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அவ்வாறு இருக்க முடியாது. இருக்க வீடின்றி குளிரால் ஒருவர் மடிவது செய்தியாகத் தெரியாதபோது, ஒரு நகரின் பங்குச்சந்தையில் 10 புள்ளிகள் வீழ்ச்சியடைவது பெரிய செய்தியாக, துன்பகர நிகழ்வாக நோக்கப்படுகின்றது. இவ்வாறே மனிதர்கள் முக்கியத்துவம் இன்றி ஒதுக்கப்படுகிறார்கள், தேவையற்ற ஒன்றாக கருதப்படுகிறார்கள்.
பலர் பசியால் வாடும்போது, நுகர்வுக்கலாச்சாரமும், பொருட்களை வீணாக்கும் கலாச்சாரமும், உணவு உட்பட விலைமதிப்பற்ற வளங்களை வீணாக்குவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு நம்மில் சிலரைத் தள்ளியுள்ளது. நன்னெறி அடிப்படையில் எழும் இத்தீவிரப்பிரச்சனைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க நான் அழைப்பு விடுக்கிறேன். நம் சகோதர சகோதரிகளின் மீதும், இந்த பூமியின் மீதும் நாம் கொண்டிருக்கும் ஒன்றிணைந்த கடமையில் ஊறிய ஒருமைப்பாட்டுணர்வுடன் நன்னெறி அடிப்படையில் எழும் இத்தீவிரப்பிரச்சனையை ஆழமாகச் சிந்திக்கும்படி உங்கள் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு இப்புதன் பொதுமறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
படைத்தவைகளை நாம் பராமரிக்கவேண்டியது, வரலாற்றின் துவக்கக்காலத்தில் இறைவன் எடுத்துரைத்த ஒன்று மட்டுமல்ல, அவர் தன் திட்டத்தின் ஒரு பகுதியாக நம் ஒவ்வொருவரிடமும் இன்றும் ஒப்படைத்து வரும் ஒன்றாகும், என தன் டுவிட்டர் பக்கத்திலும் இப்புதனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.