2013-06-05 16:54:59

தன் துன்பத்திற்காக கடவுளிடம் அழுது புலம்புவது இறைவனை நோக்கி எழுப்பப்படும் செபம் - திருத்தந்தை


ஜூன்,05,2013. தன் துன்பத்திற்காக கடவுளிடம் அழுது புலம்புவது பாவமல்ல, மாறாக, அது இதயத்திலிருந்து இறைவனை நோக்கி எழுப்பப்படும் செபம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
வத்திக்கான் நூலகப் பணியாளர்களுக்கும், இறைவழிபாட்டு திருப்பீடப் பேராயத்தின் பணியாளர்களுக்கும் இப்புதன் காலை புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றிய திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
தோபித்து, சாரா ஆகியோரின் வாழ்வில் நிகழ்ந்த துயரங்களை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இவர்கள் இருவரும் தங்களுக்கு நேர்ந்த துயரங்களை இறைவனிடம் எடுத்துரைத்தனரே தவிர, இறைவனை பழித்துரைக்கவில்லை என்று கூறினார்.
உலகத் துயரங்கள் என்று குறிப்பிடும்போது, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, விளிம்புகளில் வாழ்வோரைக் குறித்தும், சிறப்பாக, உணவு இல்லாமையால் வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் குறித்தும் தன் மறையுரையில் பேசினார் திருத்தந்தை.
ஏழு சகோதரர்களை மணந்து, குழந்தைப்பேறு இன்றி இறந்த பெண்ணைக் குறித்து சதுசேயர்கள் இயேசுவிடம் கேள்வி எழுப்பியதுபற்றிய நற்செய்தியில், சதுசேயர்களின் கருத்துக்கள் உண்மையைக் கண்டறியும் எண்ணத்துடன் எழுப்பப்பட்ட கேள்விகள் அல்ல என்று கூறினார் திருத்தந்தை.
சதுசேயர்களைப் பொருத்தவரை, இந்த ஏழு சகோதரர்களோ, அல்லது அந்தப் பெண்ணோ மனிதர்கள் என்பதை விட, அவர்களது கேள்விகளுக்கு உதவும் ஒரு விவாதப் பொருள் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் திருஅவையில் நாம் பலரை வெறும் எண்ணிக்கைகளாகவும், பொருட்களாகவும் பயன்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.
சதுசேயர்களைப் போல மனிதர்களைப் பற்றி விவாதங்கள் மேற்கொள்வதற்குப் பதிலாக, தோபித்து, சாராவைப் போல, உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனிதர்களுக்காக இறைவனிடம் நம் மன்றாட்டுக்களை எழுப்புவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.


ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.