2013-06-05 16:58:03

சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்குத் தீர்வு காண திருத்தந்தையின் தூண்டுதலால் Cor Unum அவை கூட்டம்


ஜூன்,05,2013. சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு உலகம் கவனம் செலுத்த மறுக்கும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் உலகின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் வகையில் செய்திகள் வழங்கி வருகிறார் என்று திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு அவையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Giampietro Dal Toso, கூறினார்.
சிரியாவில் நிகழ்ந்துவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொணர, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தூண்டுதலால், இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் வத்திக்கானில் கூடிய Cor Unum அவையின் கூட்டத்தைப் பற்றி வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு பேட்டியளித்த பேரருள்திரு Dal Toso இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் இந்த வன்முறைகளால், சிரியாவில் தற்போது 70 இலட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பேரருள் தந்தை Dal Toso, Cor Unum ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் பிறரன்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள 20க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் கலந்து கொண்டன என்று கூறினார்.
சிரியாவில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari, மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் பணிபுரியும் ஒரு சில ஆயர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தின் உறுப்பினர்களை இப்புதன் காலை 9.15 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித மார்த்தா இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.