2013-06-05 17:08:19

அன்னைமரியா திருத்தலங்கள் – ஆப்ரிக்காவின் அன்னைமரியா, திருத்தலம்
(Our Lady of Africa, Algiers, Algeria)


ஜூன்,05,2013. அல்ஜீரியா நாடு, ஆப்ரிக்கக் கண்டத்திலும், மத்தியதரைக்கடல் பகுதியிலும் அமைந்துள்ள பெரிய நாடாகும். இது, உலகில் 10வது பெரிய நாடாகவும் அமைந்துள்ள நாடாகும். இந்த வட ஆப்ரிக்க நாடு, வடகிழக்கில் டுனிசியாவையும், கிழக்கில் லிபியாவையும், மேற்கில் மொரோக்கோவையும், தென்மேற்கில் மேற்கு சஹாரா, மவ்ரித்தானியா, மாலி ஆகிய நாடுகளையும், தென்கிழக்கில் நைஜரையும், வடக்கில் மத்தியதரைக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது இவ்வுலகில் மக்கள்தொகையில் 34வது இடத்திலும் உள்ள இசுலாமிய நாடும் ஆகும். அல்ஜீரியா என்ற பெயர், அல்ஜியர்ஸ் (Algiers) என்ற நகரிலிருந்து பிறந்ததாகும். அல்ஜியர்ஸ் என்றால் தீவுகள் என்று அர்த்தம். இந்நாட்டில் Berber என்ற வட ஆப்ரிக்காவின் பழங்குடி இன மக்கள் கி.மு 4000 ஆண்டுமுதல் சிறிய சிறிய அரசுகளை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். கி.பி.200ம் ஆண்டில் உரோமைப் பேரரசு இந்த அரசுகளைத் தனது ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்தது. கி.பி. 2ம் நூற்றாண்டில் இந்நாட்டில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. கி.பி. 4ம் நூற்றாண்டின் இறுதிக்குள் இம்மக்களின் பகுதிகள் கிறிஸ்தவமயமாயின. இவர்கள் பெருமெண்ணிக்கையில் கிறிஸ்தவத்தைத் தழுவினர். இப்பகுதியை இசுலாமியர் ஆக்ரமித்து அதனை இசுலாமியப் பகுதியாக மாற்றும்வரை, 9 நூற்றாண்டுகளுக்கு இப்பகுதி கிறிஸ்தவப் பகுதியாகவே இருந்தது.
ஆயினும், கி.பி.642 மற்றும் 669ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அராபிய இராணுவம் முதல்முறையாக இப்பகுதியில் நுழைந்தது. 7ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இசுலாமும், அராபிய மொழியும் இப்பகுதியில் புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார உறவுகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தன. 8 மற்றும் 11ம் நூற்றாண்டுகளில் இப்புதிய மதமும், புதிய மொழியும் வட ஆப்ரிக்கா முழுவதும் ஆதிக்கம் செய்யத் தொடங்கின. Berber இன மக்கள் இசுலாத்துக்கு மாறினர். பின்னர் 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் இந்த Berber இன மக்களின் வளமை இஸ்பெயின் மற்றும் துருக்கி நாட்டவரைக் கவர்ந்திழுத்தது. துருக்கியின் ஆதிக்கமும் வளர்ந்தது. கிறிஸ்தவமும் அழிந்தது. இறுதியாக 1830ம் ஆண்டில் ப்ரெஞ்ச் காலனி ஆதிக்கம் இப்பகுதியில் ஆரம்பித்தது. தற்போதைய அல்ஜீரிய நாட்டுக்கு எல்லைகளையும் வகுத்தது பிரான்ஸ். அல்ஜீரியாவை பிரான்ஸ் கைப்பற்றிய பின்னர், கிறிஸ்தவம் மீண்டும் இந்நாட்டில் பரவத் தொடங்கியது. அல்ஜியர்ஸின் முதல் ஆயராக இருந்த Dupuch என்பவர், அந்நாட்டில் ஆலயங்களோ, தங்குவதற்கு இடமோ, பணமோ இல்லாமல், முஸ்லீம்களால் சூழப்பட்டு நெருக்கடிக்கு உள்ளானார். இவர் முஸ்லீம்களின் நட்பைப் பெறவேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தார்.
ஆயர் Dupuch, பிரான்சின் லியோன் நகருக்கு ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்று இயேசுவின் திருஇதய சகோதரிகள் சபையினர் இல்லத்தில் தங்கினார். அல்ஜியர்சில் ஆலயம் கட்டுவதற்கு உதவிகளுக்கு விண்ணப்பித்தார். லியோனின் மாதா சபையினர் வெண்கலத்தாலான அமலஉற்பவி திருஉருவத்தை ஆயருக்கு வழங்கினர். கறுப்பு நிறத்தாலான இந்த உருவம், ஆப்ரிக்காவின் முகமதியர்கள் (Mohammedans) மற்றும் நீக்ரோக்களின் பாதுகாவலியாக நோக்கப்பட வேண்டுமென்ற ஆவலில் அதனை ஆயரிடம் கொடுத்தனர். ஆயர் Dupuch அல்ஜியர்ஸ் திரும்பியவுடன், அப்போதுதான் அல்ஜியர்ஸ் வந்திருந்த Trappist சபை துறவிகளிடம் அந்த அன்னைமரியா திருஉருவத்தை ஒப்படைத்தார். ஆயர் Dupuchவுக்குப் பின்வந்த ஆயர் Pavy, 1858ம் ஆண்டில் தற்போதைய பசிலிக்காவுக்கு அடித்தளமிட்டார். அவ்விடம், 124 மீட்டர் உயரமுள்ள ஒரு குன்றின்மீது மத்தியதரைக்கடலை நோக்கியபடி இருந்தது. லியோன் நகரிலுள்ள Fourvieres அன்னைமரியா பேராலயத்தைப் பிரதிபலிப்பதாய் இந்தப் பசிலிக்கா இருந்தது. 1872ம் ஆண்டில் கர்தினால் Lavigerie என்பவரால் இப்பசிலிக்கா அருள்பொழிவு செய்யப்பட்டது. ஆப்ரிக்காவில் கத்தோலிக்க விசுவாசத்தைப் பரப்புவதற்குக் கடினமாய் உழைத்தவர் கர்தினால் Lavigerie என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பசிலிக்காக் கட்டி முடிக்கப்பட்டவுடன் Trappist சபை துறவிகளிடமிருந்து அந்த அன்னைமரியா திருஉருவத்தைப் பெற்று அங்கு வைத்தார் ஆயர் Pavy. இருண்ட கண்டம் என அழைக்கப்பட்ட ஆப்ரிக்காவுக்கு நுழைவாயிலாக அல்ஜீரியா இருப்பதால் இந்த அன்னைமரியா திருஉருவம், ஆப்ரிக்காவின் அன்னைமரியா எனப் பெயர் பெறலாயிற்று.
இவ்வன்னைமரியா துன்புறுவோரின் ஆறுதலாக நோக்கப்பட்டார். ஏழைகள், கண்பார்வையிழந்தோர், நடக்கமுடியாதவர்கள், குறிப்பாக, கடல்பயணம் செய்வோர் மற்றும் படைவீரர் இத்தாயின் உதவியை அதிகமாக நாடினர். பெருமளவில் காணிக்கைகளை வழங்கினர். பல அற்புதங்களும் நடந்தன. பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் இவ்வன்னையின் பரிந்துரை மூலம் தான் பெற்ற நன்மைக்கு நன்றியாக, ஒரு நீண்ட வெள்ளைப் பட்டு அங்கியை இத்திருஉருவத்துக்கு அணிவித்தார். மற்றொரு பெண், நீலநிற மேல் அங்கியை வழங்கினார். திருத்தந்தை 9ம் பத்திநாதர் விலைமதிப்பற்ற கற்களைக்கொண்ட மகுடத்தை வழங்கினார். கர்தினால் Lavigerie தான் புதிதாகத் தொடங்கிய வெள்ளைச் சகோதரிகள் என்ற சபையை இந்த ஆப்ரிக்க அன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்தார். அதோடு, இவர், இந்த அங்கிகளை மாற்றும் சலுகையையும் இச்சகோதரிகளுக்கு வழங்கினார். கிறிஸ்தவர்கள் இவ்வன்னையைப் போற்றுவதுபோல, முகமதியர்களும் இவ்வன்னையிடம் பக்தி கொண்டு இந்த பசிலிக்கா வந்து செபித்துப் பல புதுமைகளைப் பெற்றுச் செல்கின்றனர். இவ்வன்னையை Lala Meriem அதாவது புனித கன்னிமரியா என்று அழைத்து ஒவ்வொரு நாளும் பல முஸ்லீம்கள் முழந்தாளிட்டுச் செபிப்பதை இன்றும் காண முடிகின்றது.
ஒரு சமயம் கர்தினால் Lavigerie, படைவீரர்கள், குருக்கள், டிராப்பிஸ்ட் துறவு சபையினர் என 700 பேருடன் உரோமைக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் பயணம் செய்த கப்பல் கடும் புயலால் தாக்கப்பட்டது. உயிர் பிழைப்பது கஷ்டம் என எல்லாரும் நினைத்தனர். ஆயினும் கர்தினால் Lavigerie ஆப்ரிக்காவின் அன்னைமரியாவிடம் செபித்தார். கப்பல் புயலினின்று காப்பாற்றப்பட்டது. அதற்கு நன்றியாக, அவர்கள் அனைவரும் அந்தப் பசிலிக்காவுக்குத் திருப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டனர்.
ஒருநாள், ஒரு குருவானவர் இப்படிச் செபித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் சகோதரரிடம் இவ்வன்னையிடம் செபிப்பதற்கான காரணம் கேட்டதற்கு, அந்த முஸ்லீம் சகோதரர், எனது கிராமத்தில் பஞ்சம் அகல வேண்டுமென Lala Meriemத்திடம் கேட்க வந்தேன் என்று சொன்னார். இன்னொரு பெண் முழந்தாளிட்டு, நான் ஒரு நோயாளி, அதிகமாகத் துன்புறுகிறேன், Meriem நீர் என்னைக் குணமாக்க வேண்டுமென அழுது கொண்டிருந்தார். இன்னொரு பெண் முழங்காலிட்டு, மிரியம், எனக்கு நல்ல கணவனை அனுப்பும் என்று செபித்துக் கொண்டிருந்தார். இப்படிப் பலரும் மத வேறுபாடின்றி இத்தாயிடம் வந்து செபித்து வரங்களைப் பெற்றுச் செல்லுகின்றனர். பல முஸ்லீம் பெண்கள் தங்களது கணவர்களின் அனுமதியுடன் இங்கு வந்து மெழுகுதிரி ஏற்றி செபிக்கின்றனர். புனித அகுஸ்தீன் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆப்ரிக்காவின் அன்னைமரியா, அக்கண்டத்தின் பாதுகாவலியாகவும், துன்புறுவோருக்கு ஆறுதலாகவும் போற்றப்படுகிறார். இவ்வன்னையின் விழா ஆண்டுதோறும் ஏப்ரல் 30ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.