2013-06-05 17:03:04

G8 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்களுக்கு ஐரோப்பிய, அமெரிக்க ஆயர்கள் இணைந்து அனுப்பியுள்ள கடிதம்


ஜூன்,05,2013. உலகில் மிகவும் வறுமையுற்றோர், மிகவும் நலிந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் ஆகியோரைக் காப்பதே மனித சமுதாயத்தின் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை G8 தலைவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஜூன் மாதம் 17, 18 ஆகிய நாட்களில் வட அயர்லாந்தில் G8 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்களுக்கு ஐரோப்பிய, அமெரிக்க ஆயர்கள் இணைந்து கடிதம் ஒன்றை இத்திங்களன்று அனுப்பியுள்ளனர்.
வேளாண்மை, மக்களின் உணவு ஆகிய அம்சங்களிலும், வரி எய்ப்பு, வர்த்தகம் ஆகிய அம்சங்களிலும் G8 தலைவர்கள் அண்மையக் காலங்களில் கவனம் செலுத்துவதைக் குறித்து ஆயர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.
அரசுகள் செயல்படும் வழிகளில் இன்னும் வெளிப்படையான நெறிமுறைகளை உலகின் அனைத்து அரசுகளும் கடைபிடிக்க வேண்டும் என்பதை G8 தலைவர்கள் தங்கள் உச்சி மாநாட்டில் வலியுறுத்த வேண்டும் என்றும் ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொழில் மயமாக்கப்பட்ட நாடுகள் என்றழைக்கப்படும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இரஷ்யா, பிரித்தானிய அரசு, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடங்கிய குழுவே G8 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.