2013-06-04 16:18:27

நள்ளிரவில் நண்பர் உவமை: பகுதி 4


RealAudioMP3 "இறைவனிடம் வேண்டுதல்" என்பது குறித்த பல கேள்விகளுக்கு நாம் அடுத்த வாரம் விடை தேடுவோம் என்று சென்ற வார விவிலியத் தேடலை நிறைவு செய்தோம். 'இறைவனிடம் வேண்டுதல்' என்பது அனைத்து மதங்களிலும் கற்றுத்தரப்படும் ஓர் அடிப்படை உண்மை என்றாலும், அவ்வுண்மையைப் புரிந்துகொள்வதில் நமக்குள் எழும் கேள்விகள் பல நூறு. இக்கேள்விகள் அனைத்திற்கும் தெளிவான பதில்களை நாம் தேட ஆரம்பித்தால், நமது விவிலியத் தேடல் நிகழ்ச்சி, இன்னும் பல வாரங்கள் 'இறை வேண்டுதல்' என்ற தலைப்பைச் சுற்றியே அமையும். நாம் தற்போது ஆரம்பித்திருப்பது, 'இயேசுவின் உவமைகள்' என்ற தொடர். எனவே, தன் உவமைகள் வழியே செபத்தைப் பற்றி இயேசு கூறும் எண்ணங்களை மட்டும் நாம் தொடர்ந்து சிந்திப்போம்.

'நள்ளிரவில் நண்பர்' என்ற இந்த உவமையின் வழியாக இயேசு கற்றுத்தர விழையும் ஒரு முக்கியப் பாடம் - மனம் தளராமல், இடைவிடாமல் இறைவனிடம் வேண்டுதல் எழுப்பவேண்டும் என்ற ஒரு முக்கிய பாடம். எனினும், இந்த உவமையை வாசிக்கும்போது, இன்னும் பல பாடங்கள் நம்மை வந்தடைகின்றன.
இந்த உவமையில், நமது நாயகனைத் தேடி, அவ்வூரின் வழியேச் சென்ற வேறொரு நண்பர் இரவில் வந்து சேருகிறார். அவருக்கு உணவு படைக்க தன்னிடம் ஏதும் இல்லை என்பதை நாயகன் உணர்கிறார். எனவே, அவர் தன் அடுத்தவீட்டு நண்பரிடம் உதவிகேட்டுச் செல்கிறார். அவரோ தான் உதவ இயலாது என்பதைக் கூறியும், நமது நாயகன் தன் வேண்டுதல்களைத் தொடர்கிறார். இறைவனிடம் வேண்டுதல் என்ற உயர்ந்த முயற்சிக்குத் தேவையான மூன்று அம்சங்களை இங்கு காண்கிறோம்.

நமது நாயகன் தன் பசியைத் தீர்த்துக்கொள்வதற்கு அல்ல, தன் நண்பரின் பசியைத் தீர்க்க அடுத்தவரை நாடிச் செல்கிறார். அடுத்தவரிடம் மூடி மறைக்காமல் தன் உண்மை நிலையை எடுத்துச் சொல்கிறார். நண்பர் கதவைத் திறக்காதபோதும், நம்பிக்கையுடன் தன் விண்ணப்பத்தைத் தொடர்கிறார். செபத்திற்குத் தேவையான இந்த மூன்று அம்சங்களில் இரண்டாவது அம்சமான உண்மை நிலையை எடுத்துரைத்தல் என்பதன் உட்பொருளை சென்ற வாரம் சிந்தித்தோம். அதாவது, நம் உண்மை நிலையை நாம் உணர்ந்து, அடுத்தவரும் அதைப் புரிந்துகொள்ளும்படி வாழ்வது நிறைவான வாழ்வு. அத்தகைய வாழ்வில், ஒளிவு மறைவு, முகமூடிகள், நடிப்பு எதுவும் தேவையிருக்காது என்பதை உவமை நாயகனிடம் கற்றுக் கொண்டோம்.

தன் பசிக்காக அல்ல, தன் நண்பரின் பசியைப் போக்க அடுத்தவர் உதவியைத் தேடிச் சென்ற நமது நாயகனைப் போல, நமது செபங்களில், அடுத்தவர் தேவைகளை ஏந்திச்செல்வது அழகு என்ற பாடத்தை இன்றையத் தேடலில் நாம் சிந்திப்போம். "எனக்கு இதைத் தாரும், அதைத் தாரும்" என்று தன்னைச் சுற்றியே செபங்களை எழுப்புவதற்குப் பதில், அடுத்தவரது தேவைகளை நம் செபங்களில் சுமந்துசெல்வது இன்னும் அழகானது. அடுத்தவரது தேவைகள் நம் எண்ணங்களையும், மனதையும் நிறைக்கும்போது, நமது தேவைகள் குறையவும் மறையவும் வாய்ப்புண்டு. அகில உலகக் கத்தோலிக்கக் குடும்பம் இத்தகைய ஒரு வேண்டுதல் முயற்சியில் அண்மையில் ஈடுபட்டிருந்தது.
ஜூன் 2, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த ஓர் அழைப்பின்பேரில், உலகின் பல நாடுகளிலும் வாழும் கத்தோலிக்கர்கள் ஒரே நேரத்தில் திரு நற்கருணை ஆராதனை ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆராதனைக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு முக்கிய மன்றாட்டு கருத்துக்களை வெளியிட்டார்.

திருத்தந்தையின் முதல் கருத்து:
"உலகெங்கும் பரவியுள்ள திருஅவை, மிகப் புனிதமான நற்கருணையை வழிபடுவதில் ஒன்றாக இணைந்துள்ளது. இறைவார்த்தைக்கு இன்னும் அதிகமாகக் கீழ்படிவதால், அன்னையாம் திருஅவையை, இன்னும் அழகுள்ள, கறைகளற்ற, புனிதத் தாயாக இவ்வுலகின் கண்களுக்கு இறைவன் காட்டுவாராக.
துன்பத்தால் நிறைந்திருக்கும் இவ்வுலகில், இறைவனின் கருணையையும், அன்பையும் ஏந்திச் செல்லும் கருவியாக திருஅவையை இறைவன் மாற்றுவாராக. இவ்வகையில், இவ்வுலகத் துன்பங்களுக்கு உகந்த பதிலாக, அமைதியையும், ஆனந்தத்தையும் தாய் திருஅவை கொணர்வாராக" என்பது திருத்தந்தையின் முதல் கருத்து.

திருத்தந்தையின் இரண்டாம் கருத்து:
அடிமைத்தொழில், மனித வர்த்தகம், போதைப் பொருள் வர்த்தகம் ஆகியவற்றாலும், போரினாலும் துன்புறம் மக்களுக்காக...
பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்காக, குழந்தைகளுக்காக...
விழிப்பாயிருக்கும் திருஅவையின் செவிகளை இவர்களது மௌன அலறல்கள் சென்றடைவதாக. சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைக் காணும் திருஅவை, வன்முறைகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும் இவர்களை மறவாதிருப்பதாக.
பொருளாதார நெருக்கடி மற்றும், வேலைவாய்ப்பின்மையால் துன்புறுவோருக்காக...
வயது முதிர்ந்தோர், வீட்டையும், நாட்டையும் இழந்தோர், சிறையிலிருப்போர் ஆகிய அனைவருக்காக....
நற்கருணை நாதருக்கு முன், தாய் திருஅவை எழுப்பும் இந்த இணைந்த செபம், இவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக. மனித மாண்பை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணைபுரிவதாக.

இந்த ஞாயிறு ஆராதனையை முடித்து நான் வெளியே வந்தபோது, எனக்காக, என் குடும்பத்தினருக்காக, என்னிடம் செபங்களைக் கேட்டிருந்தவர்களுக்காக நான் செபிக்கவில்லையே என்ற ஓர் உறுத்தல் எழுந்தது. கூடவே, ஓர் அழகான திருப்தியும் எழுந்தது. அதாவது, நான், எனது குடும்பத்தினர், எனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோரின் தேவைகளை விட, இன்னும் அதிகத் தேவையில் உள்ளவர்களுக்காக நான் இந்த ஆராதனை நேரத்தைச் செலவிட்டது ஒருவகை திருப்தியைத் தந்தது. செபத்தின் ஓர் அடிப்படை மனப்பக்குவம், தன்னைக் கடந்து செல்லக்கூடிய நிலை என்ற உண்மையை எனக்குள் தெளிவாக்கியது. தன் நண்பருக்காக, 'நள்ளிரவில் உதவிகேட்டுச் சென்ற நமது நாயகன்', தன்னலத்தில் சிறைப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு ஒரு மாற்று அடையாளமாக இருக்கிறார்.

நாம் வாழும் 21ம் நூற்றாண்டு, "நான், என்னுடையது, எனக்கு" என்பதை, தேவைக்கதிகமாக வலியுறுத்தும் நூற்றாண்டாக விடிந்துள்ளதோ என்ற கவலை உலகில் பரவியுள்ளதைப் பார்க்கிறோம். இந்தக் கவலையை மையப்படுத்தி, TIME வார இதழ் 'The ME ME ME Generation' - அதாவது, 'எனக்கு, எனக்கு, எனக்கு தலைமுறை' என்ற முதல்பக்கக் கட்டுரை ஒன்றை இரு வாரங்களுக்கு முன் (May 20, 2013) வெளியிட்டது. 1980ம் ஆண்டுக்கும், 2000மாம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் பிறந்து, தற்போது 13 முதல், 33 வயதுக்கு உட்பட்ட இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தன்னைச் சுற்றியே உலகம் இயங்குகிறது என்ற எண்ணத்தில் அதிகம் வளர்ந்துள்ளனர் என்று கட்டுரை ஆசிரியர் கூறுகிறார். தண்ணீரில் தோன்றிய தன் பிம்பத்தின் அழகை இரசிப்பதில் தன் வாழ்வு முழுவதையும் செலவிட்ட, 'Narcissus' என்ற கிரேக்கப் புராண நாயகனுடன் இத்தலைமுறையினரை ஒப்பிட்டுள்ளார் ஆசிரியர் Joel Stein. பல எடுத்துக்காட்டுகளுடன் அவர் கூறும் விவரங்கள் சங்கடத்தை உருவாக்குகின்றன.

தற்போதைய தொடர்பு சாதன நுட்பங்களை இத்தலைமுறையினர் பயன்படுத்தும் வழிகள் ஓர் எடுத்துக்காட்டு. 30 வயதுக்குட்பட்ட பல இளையோர் தங்களை, தங்கள் வாகனங்களை, தங்கள் செல்ல மிருகங்களை புகைப்படம் எடுத்து, அவற்றை Facebook, Twitter வழியே வெளியிடுகின்றனர். இந்தச் சுயவிளம்பரத்தை எத்தனை பேர் விரும்பினர், விரும்பவில்லை என்பதை அறிய, தங்கள் Facebook, Twitter பக்கங்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பார்க்கின்றனர் என்று Joel Stein கூறும் பல எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று. தன்னைச் சுற்றியே இவ்வுலகம் இயங்குகிறது என்ற ஒரு மயக்கத்தில் வாழும் தலைமுறை இது என்பதை அவர் பல புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளார். 'Narcissus' என்ற அந்த புராண நாயகனின் பெயர், 'narke' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்த ஒரு பெயர். 'narke'ன் பொருள்... 'உறக்கம், மயக்கம், அல்லது, மரத்துப்போன ஒரு நிலை'

நான், எனது, எனக்கு என்ற மயக்க நிலையில் மரத்துப்போன ஓர் மனசாட்சியுடன் வாழும் நமக்கு, 'நள்ளிரவில் நண்பர்' உவமையின் நாயகன் சொல்லித் தரும் ஓர் உன்னத பாடம்... நமது செபங்களில் நம் தேவைகளைவிட, அடுத்தவர் தேவைகளை ஏந்திச் செல்வது அழகு. பிறருக்காக வேண்டுதல்கள் எழுப்பப்பட்ட பல நிகழ்வுகளை நாம் விவிலியத்தின் பல இடங்களில் காண்கிறோம். அழியவிருந்த சோதோம் நகர மக்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் வேண்டுதல் எழுப்புவதை தொடக்க நூல் 18ம் பிரிவில் (தொடக்க நூல் 18: 22-33) நாம் வாசிக்கிறோம். அவரைத் தொடர்ந்து, மோசே, இறைவாக்கினர்கள் பலர் மக்களுக்காக செபங்களை எழுப்பியுள்ளனர். பிறருக்காக வேண்டும்படி தன் இறைமக்களுக்கு புனித பவுல் அடியாரும் இறைமகன் இயேசுவும் கூறிய அறிவுரைகளோடு இன்றைய விவிலியத் தேடலை நாம் நிறைவு செய்வோம்:

புனித பவல் அடியார் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 6 18
எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்: எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாருங்கள்: இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்.

திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 2 1-2
அனைவருக்காகவும் மன்றாடுங்கள்: இறைவனிடம் வேண்டுங்கள்: பரிந்து பேசுங்கள்: நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்.
இறைமக்கள், அயலவர் என்ற எல்லைகளைக் கடந்து நம் பகைவர்களுக்காகவும் வேண்டுதல்கள் எழுப்ப வேண்டும் என்று இயேசு தன் மலைப்பொழிவில் கூறிய எண்ணம், அடுத்தவருக்காக செபித்தல் என்ற அழகிய சிந்தனையின் சிகரம்.

மத்தேயு நற்செய்தி 5 43-44
உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.








All the contents on this site are copyrighted ©.