2013-06-04 16:48:13

திருத்தந்தை பிரான்சிஸ் : முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர் மேய்ப்பர், தந்தை


ஜூன்,04,2013. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர், கடவுளின் திட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தது, இக்காலத் திருஅவைக்கு ஒரு பாடம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்கள் இறந்ததன் 50ம் ஆண்டு நிறைவான இத்திங்கள் மாலை 6.15 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவிலுள்ள அத்திருத்தந்தையின் கல்லறை முன்பாகச் செபித்த பின்னர், பெர்கமோ மறைமாவட்டத்தின் மூவாயிரம் திருப்பயணிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை 23ம் அருளப்பர் பற்றிய சிந்தனைகளைப் பகிர்நது கொண்டார்.
பணிவும், கடவுளில் நம்பிக்கை வைப்பதும் எவ்வாறு அகஅமைதிக்கு இட்டுச் செல்கின்றது என்பதற்கு, திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்களின் வாழ்வு ஒரு பாடமாக இருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், அகில உலகும் திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்களை மேய்ப்பராகவும், தந்தையாகவும் ஏற்கின்றது, அவர் தந்தையாக இருந்ததால் மேய்ப்பராக இருந்தார் என்றும் கூறினார்.
திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்கள், “நல்ல திருத்தந்தை” என அன்றும் இன்றும் பலரால் போற்றப்படுகிறார் என்றும், உண்மையிலேயே நல்லவராகவும், நன்மைத்தனம் நிறைந்தவராகவும் ஓர் அருள்பணியாளரைக் காண்பது எவ்வளவு மகத்தானது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
Angelo Roncalli என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை 23ம் அருளப்பர், இத்தாலியின் Sotto il Monte என்ற சிறிய நகரில் 1881ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பிறந்தார். பெர்கமோ மறைமாவட்டத்துக்கென 1904ம் ஆண்டில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 1925ம் ஆண்டுக்கும் 1944ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல்கேரியா, துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றினார். 1953ம் ஆண்டு வெனிஸ் பேராயரானார். 1958ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி திருத்தந்தையாகப் பணியைத் தொடங்கிய திருத்தந்தை 23ம் அருளப்பர் 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.