2013-06-04 16:45:52

உரிமை மீறல்களிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற திருத்தந்தை பிரான்சிஸ் ஊக்குவிப்பு


ஜூன்,04,2013. உரிமை மீறல்களிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் பணி மிகவும் முக்கியமானது, இதனைத் தொடர்ந்து செய்யுங்கள் என்று அருள்பணியாளர் Hans Zollner அவர்களிடம் இச்செவ்வாய் காலை மும்முறை கூறி ஊக்குவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய் காலையில் புனித மார்த்தா இல்ல ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் கலந்து கொண்ட உரோம் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் சிறார்ப் பாதுகாப்பு மையத்துக்குத் தலைமைதாங்கி நடத்திவரும் ஜெர்மன் நாட்டு இயேசு சபை அருள்பணியாளர் பேராசிரியர் Hans Zollner அவர்களை இத்திருப்பலிக்குப் பின்னர் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், அந்த அருள்பணியாளர் இப்பணியைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்குவித்தார்.
“உரிமை மீறல்களைத் தடுத்தல் : உலகளாவிய முயற்சி” என்ற தலைப்பில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் உதவியுடன் கிரகோரியன் பல்கலைகழகத்தில் இம்மையம் நடத்திய கருத்தரங்கில் இலங்கை ஆயர்களும் கலந்து கொண்டனர்.
உரிமை மீறல்களுக்குப் பலியாகும் அப்பாவிச் சிறாருக்கென அர்ப்பணிக்கப்பட்ட அனைத்துலக நாள் ஜூன் 4, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்டோரும் இச்செவ்வாய் காலை திருப்பலியில் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.