2013-06-03 17:41:23

மற்றவர்களுடன் விசுவாசத்தைப் பகிர்வதை, இயேசுவின் அப்பம் பலுகுதல் புதுமை சுட்டிக்காட்டுகிறது


ஜூன்,03,2013. கிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் ஆழமான ஐக்கியத்திற்கு மனம்திரும்புவதன் ஒரு பகுதியாக, மற்றவர்களுடன் நம் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்வதை, இயேசுவின் அப்பம் பலுகுதல் புதுமை சுட்டிக்காட்டி நிற்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் கொண்டிருக்கும் சிறு விசுவாசத்தையும் நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டுமேயொழிய நம்மையே நாம் உட்புறமாகத் தாழிட்டுக் கொள்ளக் கூடாது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை, அப்பங்களையும் மீனையும் பலுக வைத்து மக்களுக்கு வழங்கிய இயேசுவின் புதுமை குறித்து விளக்கமளித்தபோது இவ்வாறு கூறினார்.
இயேசுவின் இந்தப் புதுமையில் என்னை மிகவும் கவர்ந்தது அவர் மக்களுக்கு உணவை வழங்கியதில் தன் சீடர்களையும் ஈடுபடுத்திய விதமே என்றார் அவர்.
கலிலேயா கடல் வரை தன்னைப் பின்தொடர்ந்த மக்கள் பசியால் வாடும்போது, அவர்களுக்கு உண்ண ஏதாவது கொடுக்குமாறு இயேசு கூறியது, சீடர்களை அதில் ஈடுபடுத்தவும், அவர்களுக்குச் சில விடயங்களைக் கற்பிக்கவுமே என்றார் திருத்தந்தை.
ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து அவைகளைப் பிட்டு அவர் சீடர்கள் வழி வழங்கியது, பலுகுதல் என்று சொல்வதைவிட பகிர்தல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என உரைத்தார் பாப்பிறை. இந்தப் அப்பம் பலுகுதல் இயேசுவின் அடையாளமாக இருக்கின்றது, ஏனெனில் மனித சமூகத்திற்கான இறைவனின் அப்பம் அவரே என மேலும் தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.