2013-06-03 17:39:34

போர், மனித சமுதாயத்தின் தற்கொலை என்கிறார் திருத்தந்தை


ஜூன்,03,2013. “போர், மனித சமுதாயத்தின் தற்கொலை. ஏனெனில் இது இதயத்தைக் கொலை செய்வதுடன், அன்பையும் கொலை செய்கின்றது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போர் இடம்பெறும் பகுதிகளில், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்ட இத்தாலியப் படைவீரர்களின் உறவினர்கள், அப்பணிகளில் காயமடைந்த படைவீரர்கள் என ஏறக்குறைய 80 பேருக்கு இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் திருப்பலி நிகழ்த்தியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், பைத்தியக்காரத்தனமான இந்தப் போர்களுக்காக இறைவன் அழுகின்றார் எனவும் கவலையை வெளீயிட்டார்.
அதிக அதிகாரத்துக்காகத் தாகம் கொள்வதிலிருந்து சண்டை பிறப்பதை நாம் பல தடவைகளில் பார்த்திருக்கிறோம் என உரைத்த திருத்தந்தை, உள்ளூர் பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவைகளுக்கு சண்டைமூலம் தீர்வு காண விரும்பும் தலைவர்களை பல முறைகள் நாம் பார்த்திருக்கிறோம், ஏனெனில் இவர்களுக்கு மக்களைவிட பணம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது என மேலும் கூறினார்.
தனது சகோதரன் ஆபேலை, பொறாமையால் கொன்ற காயினிடம் நம் தந்தையாம் கடவுள், உன் சகோதரன் எங்கே? என்று கேட்ட சொற்களைக் கொண்டு இன்றும் நம் அனைவரையும் பார்த்து அவர் கேட்பதை நம்மால் கேட்க முடிகின்றது என மேலும் கூறிய திருத்தந்தை, போருக்குப் பின்னால் எப்போதும் பாவங்கள் இருக்கின்றன என எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.