2013-06-03 17:34:21

திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மையே நாம் கடவுளாக என்ணும் நிலைக்குச் சென்றுவிடவேண்டாம்


ஜூன்,03,2013. இறைவனுடன் நாம் கொள்ளும் உறவில் நம் தனித்தன்மையை வலியுறுத்தி நமக்கு தலைவன் தேவையில்லை, அவர் நம்மைத் தொந்தரவு செய்யவேண்டாம் என நாம் ஒதுங்கிச் செல்வது, நமக்கென ஒரு கடவுளை நாமே உருவாக்கிக் கொள்வதற்கு, அதையும் தாண்டி, நம்மையே கடவுளாக எண்ணிக் கொள்வதற்கு எடுத்துச்செல்லும் என எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லக் கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, பாவியான யூதாஸ் தனது வாழ்வைக் கஞ்சத்தனத்தில் துவங்கி, பிறர் பணத்தைச் சுரண்டுவதில், கையாடுவதில் சென்று முடித்தார் என்று கூறினார்.
சுரண்டி வாழ்வது மற்றும் சுரண்டுவது என்பது கிறிஸ்தவ சமூகத்தில் மிகவும் தவறான பாதையாகும் எனவும் கூறினார் பாப்பிறை.
பாவிகள், ஊழல்வாதிகள் மற்றும் புனிதர்கள் குறித்து இத்திங்கள் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை. புனிதர்கள் திருஅவையில் விளக்காக உள்ளார்கள், பாவிகளும் உள்ளார்கள், அவர்களால் திருந்த முடியும், ஆனால் ஊழல்வாதிகள் பாவிகள் என்பதையும் தாண்டிச்சென்று தங்களுக்காக, தங்கள் குழுவுக்காக மட்டுமே உழைக்கக் கூடியவர்கள், இத்தகைய ஒரு நிலைக்கு நாம் சென்றுவிடாமல் இருக்க திருஅவையில் இருப்போர் அனைவரும் செபிப்போம் எனக் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.