2013-06-01 16:47:04

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை கலாச்சார நிறுவனம் அல்ல, ஆனால் அது இயேசுவின் குடும்பம்


ஜூன்,01,2013. திருஅவை கலாச்சார நிறுவனம் அல்ல, ஆனால் அது இயேசுவின் குடும்பம் என்று இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருச்சிலுவையின் அவமானத்தோடு வாழ்வதற்குக் கிறிஸ்தவர்கள் வெட்கப்படக் கூடாது என்றும், இவ்வுலகின் போக்குகளில் சிக்கிவிடாதிருக்குமாறும் கூறினார் திருத்தந்தை.
மறைநூல் அறிஞர்களும், தலைமைக் குருக்களும் இயேசுவிடம், எந்த அதிகாரத்தால் இவற்றை நீர் செய்கின்றீர் என்று கேள்வி கேட்டு, அவரை மீண்டும் சிக்க வைக்கப் பார்த்தனர், அவரைத் தவறு செய்வதற்குக் கட்டாயப்படுத்தினர், இயேசு செய்த புதுமைகளைப் பார்த்ததால் இவர்களுக்கு இப்பிரச்சனை ஏற்படவில்லை, ஆனால், தீயஆவிகள், இயேசுவே நீர் இறைமகன், நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்று அவரிடம் உரக்கச் சொல்லியதைக் கேட்டே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு இறைமகன், அவர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதே அவர்களுக்கு உண்மையிலேயே துர்மாதிரிகையாக இருந்தது, கடவுளான இயேசு மனிதரானார், இது நம் வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்துகின்றதா என்றும் கேட்டார் திருத்தந்தை.
வார்த்தை மனுவுருவானார், இதுவே அவர்களுக்குத் துர்மாதிரிகையாக இருந்தது, நாம் விரும்பும் அனைத்துச் சமூகப் பணிகளையும் செய்யலாம், அப்பொழுது நம்மைப் பாராட்டும் உலக மக்கள், இப்பணிகளை நாம் கிறிஸ்துவின் சதையாக இருக்கும் அம்மக்களுக்குச் செய்கின்றோம் என்று சொன்னால் அது துர்மாதிரிகையாகி விடுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
ஆயினும் இந்தத் துர்மாதிரிகைக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும், திருஅவை இயேசுவின் குடும்பம், இயேசு மனுவுருவான இறைமகன் என்று திருஅவை அறிவிக்கிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருச்சிலுவை குறித்து நாம் வெட்கப்படாதிருக்கும் வரத்தை ஆண்டவரிடம் இன்று கேட்போம் எனக் கூறினார்.
இத்திருப்பலியில் ஹவானா பேராயர் கர்தினால் ஹைமே லூக்காஸ் ஒர்த்தேகா அலமினோ திருத்தந்தையோடு சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிகழ்த்தினார். இன்னும், சில வத்திக்கான் பணியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.