2013-05-31 16:07:07

திருத்தந்தை பிரான்சிஸ், ஐ.நா.பொது அவையின் 67வது அமர்வின் தலைவர் சந்திப்பு


மே,31,2013. ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொது அவையின் 67வது அமர்வின் தலைவர் Vuk Jeremić அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Dominique Mamberti ஆகியோரையும் சந்தித்தார் Vuk Jeremić.
பன்னாட்டு அளவில், குறிப்பாக, மத்திய கிழக்கில் இடம்பெறும் சண்டைகள் ஏற்படுத்தியுள்ள கடும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும், இச்சண்டைகள் அமைதியான வழிகளில் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
பல்வேறு சமூகங்கள் மத்தியில் ஒப்புரவும், பல்வேறு இனங்கள் மற்றும் சிறுபான்மை சமயத்தவரின் உரிமைகள் மதிக்கப்படவும், அவை ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டியதன் முக்கியத்துவமும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்றும் அந்த அலுவலகம் கூறியது.
இன்னும், மனித வியாபாரம், புலம்பெயர்வோர் மற்றும் குடியேற்றதாரரின் பிரச்சனைகள், உலகின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள், மனித சமுதாயத்தின் பொதுநலனைக் காப்பதில் ஐ.நா.வின் பங்கு, அதற்குக் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றும் பணிகள் போன்றவையும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.