2013-05-30 16:19:39

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களுக்கு, ஆஸ்திரியா நாட்டில் விருது


மே,30,2013. அலெக்சாந்திரியாவின் திருத்தந்தை என்று அழைக்கப்படும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களுக்கு, ஆஸ்திரியா நாட்டில் இத்திங்களன்று 'கீழை வழிபாட்டு முறைகளைக் காப்பவர்' (Defender of Pro Oriente) என்ற விருது வழங்கப்பட்டது.
‘Pro Oriente’ என்ற அறக்கட்டளை நிறுவியுள்ள இந்த விருதினை, வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn அவர்கள் இரண்டாம் Tawadros அவர்களுக்கு வழங்கினார்.
கத்தோலிக்கத் திருஅவைக்கும், கீழை ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை சபைகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்த, காலம்சென்ற கர்தினால் Franz König அவர்களால் 'Pro Oriente' அறக்கட்டளை 1964ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இவ்வறக்கட்டளையின் விருதினைப் பெற்றுக்கொண்ட முதுபெரும்தலைவர் இரண்டாம் Tawadros அவர்கள், கிறிஸ்தவத்தின் அடிப்படை விதி ஒற்றுமை என்றும், நம்மிடையே வேறுபாடுகள் இருப்பின் அவை இந்த அடிப்படையின் விதிவிலக்கு என்றும் கூறினார்.
ஆஸ்திரியா நாட்டில் 12 நாட்கள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இரண்டாம் Tawadros அவர்கள், அங்கு ஐந்து புதிய காப்டிக் வழிபாட்டு முறை கோவில்களைத் திறக்கவுள்ளார் என்றும், ஆஸ்திரியா அரசுத் தலைவர் Heinz Fischer அவர்களைச் சந்திப்பார் என்றும் ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்கள், அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் – ICN








All the contents on this site are copyrighted ©.