2013-05-30 16:18:55

இந்தியாவில் 1 கோடியே 90 இலட்சம் மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் திரு நற்கருணை ஆராதனையில் கலந்து கொள்வர் - கர்தினால் Oswald Gracias


மே,30,2013. ஜூன் 2ம் தேதி, வருகிற ஞாயிறன்று, இந்தியாவில் 1 கோடியே 90 இலட்சம் மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் திரு நற்கருணை ஆராதனையில் கலந்து கொள்வர் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Oswald Gracias செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருஅவை வரலாற்றில் முதன்முறையாக நிகழவிருக்கும் இந்த அகில உலக ஒருமித்த ஆராதனையில், இந்தியத் தலத்திருஅவையில் உள்ள பெரும்பாலான பங்குகளும், துறவற இல்லங்களும் கலந்துகொள்ளும் என்று கர்தினால் கூறினார்.
உரோம் நேரம் மாலை 5 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் ஆராதனையைத் துவங்கும்போது, அதற்கு இணையான இந்திய நேரம் மாலை 8.30 மணிக்கு, இந்திய ஆலயங்களில் ஆராதனைகள் துவங்கும்.
ஆராதனைக்கு முன்னதாக, இளையோர் பங்கேற்கும் மெழுகு திரிகள் ஏந்திய ஊர்வலங்கள் நடைபெறும் என்றும், இந்த ஊர்வலங்கள் கோவில்களில் நிறைவுற்று, ஆராதனைகள் நடைபெறும் என்றும் கர்தினால் Gracias விளக்கினார்.
இந்த உலகளாவிய திரு நற்கருணை ஆராதனை, திருத்தந்தையின் இரு முக்கிய கருத்துக்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. “தாய் திருஅவை இறைவன் தன் குரலுக்கு இன்னும் அதிகம் செவிமடுக்கவும், இன்னும் அதிகமாக தன் கறைகள் கழுவப்பெற்று திருஅவை அழகுடன் மிளிரவும்” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் கருத்து.
“பல்வேறு அடிமை விலங்குகளால் துன்புறும் அனைவரும் எழுப்பும் செபங்கள் கேட்கப்படவும், தாய் திருஅவை தன் செபத்தாலும், விடுதலைத் தரும் செயல்களாலும் துன்புறும் மக்களுடன் இணைந்திருக்கவும்” என்பது திருத்தந்தையின் இரண்டாவது கருத்து.
திருத்தந்தையின் இரண்டாம் கருத்து இந்திய நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் ஒரு கருத்தாக உள்ளதென்று கூறிய கர்தினால் Gracias, பெண்ணடிமைத்தனம், குழந்தைகள் சந்திக்கும் ஆபத்துக்கள் ஆகிய கருத்துக்களுக்காக இந்த ஆராதனையில் சிறப்புச் செபங்கள் எழுப்பப்படும் என்று கூறினார்.
உலகமயமாக்கல் என்ற போக்கினால் வர்த்தகத்தில் இவ்வுலகம் ஒன்றித்து வருவதைக் காண முடிகிறது, அதேபோல், ஆன்மீக அளவிலும் இவ்வுலகம் ஒன்றுபட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் வண்ணம் திருத்தந்தையுடன் கத்தோலிக்க உலகம் முழுவதும் இணைந்து இந்த ஆராதனையை நடத்துகிறது என்று கர்தினால் Gracias கூறினார்.

ஆதாரம் – AsiaNews








All the contents on this site are copyrighted ©.