2013-05-29 16:31:52

அன்னைமரியா திருத்தலங்கள் – Banneux ஏழைகளின் அன்னைமரியா திருத்தலம், பெல்ஜியம்


மே,29,2013. பெல்ஜிய நாட்டின் Liège மாநிலத்தில் Banneux என்ற ஊரில் வாழ்ந்த Mariette Beco என்ற 12 வயதுச் சிறுமிக்கு இயேசுவின் தாயான கன்னிமரியா காட்சிக் கொடுத்ததை வைத்து அத்தாய் "Banneux அன்னைமரி" என்று அழைக்கப்படுகிறார். 1933ம் ஆண்டு சனவரி 15ம் தேதிக்கும் மார்ச் 2ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் 8 தடவைகள் Marietteவுக்குக் காட்சிக் கொடுத்திருக்கிறார் அன்னைமரியா. ஒரு காட்சியின்போது, தான் "ஏழைகளின் அன்னை" என்று தன்னை அறிமுகப்படுத்தி, மக்களைத் துன்பங்களினின்று தான் விடுவிப்பேன் என்றும் உறுதி கூறியிருக்கிறார் அன்னைமரியா. மற்றொரு காட்சியின்போது அவர் Marietteவிடம், காட்சி கொடுத்த இடத்திலிருந்த சிறிய நீர் ஓடையிலிருந்த நீரைக் குடிக்குமாறுச் சொன்னதோடு, இந்தத் தண்ணீர் அனைத்து நாடுகளின் மக்களுக்கு குணமளிக்கும் என்றும் உறுதியளித்திருக்கிறார். தற்போது அந்தச் சிறிய நீர் ஓடையிலிருந்து தினமும் ஏறக்குறைய இரண்டாயிரம் காலன் தண்ணீர்க் கிடைப்பதாகவும், அந்த நீரைக் குடிப்பவர்களில் பலர் புதுமையாகக் குணம் பெறுவதாகவும் பல அறிக்கைகள் கூறுகின்றன.
Mariette Beco, இக்காட்சிகளுக்குப் பின்னர் திருமணமாகி குடும்பத்தோடு வாழ்ந்து தனது 90வது வயதில் 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இறந்தார். இவர் 2008ம் ஆண்டில் தனது காட்சிகள் குறித்து கடைசியாக ஓர் அறிக்கை வெளியிட்டார். தபாலைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஒரு சாதாரண தபால்காரர் வேலையை மட்டும் நான் செய்தேன். தபாலைச் சேர்த்தவுடன் தபால்காரரின் வேலை முடிந்துவிட்டது என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் Mariette Beco. தபாலில் சேர்த்த அதாவது காட்சிகள் குறித்து அவர் வெளியிட்ட செய்திகளை உலகறியச் செய்யும் பணியைத் தொடங்கினர் பெல்ஜிய நாட்டு ஆயர்கள். இக்காட்சிகள் உண்மைதானா என்பதை ஆய்வு செய்வதற்காக ஆயர்கள் நியமித்த குழு ஒன்று 1935ம் ஆண்டுமுதல் 1937ம் ஆண்டுவரை விரிவாகப் பரிசீலனை செய்தது. அதில் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் அக்குழு வத்திக்கானுக்கு அனுப்பி வைத்தது. 1942ம் ஆணடில் Liège ஆயர் Kerkhofs இக்காட்சிகள் உண்மையென அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். 1947ம் ஆண்டில் வத்திக்கானிலிருந்தும் இவற்றுக்கு அங்கீகாரம் கிடைத்தது. 1949ம் ஆண்டில் இறுதியாக அனைவருக்கும் இக்காட்சி குறித்து அறிவிக்கப்பட்டது. அன்னைமரியா, ஒரு காட்சியின்போது கேட்டுக்கொண்டதன்பேரில் அவ்விடத்தில் சிறிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் தினமும் அங்குச் சென்று அன்னைமரியாவிடம் செபித்து உடலும் உள்ளமும் குணம் பெற்றுச் செல்கின்றனர்.
Banneux என்ற ஊரில் ஓர் ஏழைக் குடும்பத்தில் 1921ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி பிறந்தவர் Mariette Beco. ஏழு குழந்தைகள் உள்ள அக்குடும்பத்தில் Mariette தான் மூத்தவர். அவர்களின் வீடு அவ்வூர் ஆலயத்துக்கு ஒரு மைல் தூரத்தில் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் இருந்தது. இக்குடும்பத்தினர் கத்தோலிக்கராக இருந்தாலும் ஆலயம் செல்வதில்லை, செபிப்பதுமில்லை. இருந்தபோதிலும் Marietteவிடம் சமய உணர்வு இருந்தது. ஒருநாள் தெருவில் கிடைத்த ஒரு செபமாலையை எப்போதும் தன்னோடு வைத்திருந்தார் Mariette. அது 1933ம் ஆண்டு சனவரி 15ம் தேதி இரவு 7 மணி இருக்கும். தனது தம்பி ஜூலியன் அன்று இன்னும் வீடு திரும்பாததால் தொட்டிலில் கிடந்த குழந்தையைப் பார்த்துக்கொண்டு, அடுப்பறை ஜன்னல் வழியாகத் தம்பி வருவாரா எனப் பார்த்துக் கொண்டிருந்தார். வெளியே இருட்டாக இருந்தது. அப்போது அந்த இருட்டில் சில மீட்டர் தூரத்தில் முட்டைவடிவத்தில் ஒளியால் சூழ்ந்து முன்பக்கம் இலேசாகக் குனிந்து, இடதுபக்கம் இலேசாகச் சாய்ந்து நீண்ட வெள்ளை அங்கியும் இடுப்பில் நீலநிறக் கச்சையும் அணிந்த ஓர் இளம்பெண்னைத் திடீரெனக் கண்டார் Mariette. அதோடு மெல்லிய ஒரு வெள்ளை முக்காடையும் அப்பெண் அணிந்திருந்தார். அப்பெண்ணின் வலது காலில் ஒரு தங்கநிற ரோஜா இருந்தது. வலது கரத்தில் செபமாலையுடன் ஒரு தங்கச் சங்கிலியும் தொங்கியது. அக்கரம் இடது கரத்தில் இணைந்து செபிப்பது போல் தோற்றமளித்தது.
இக்காட்சி குறித்து Mariette தனது தாயிடம் கூறினார். தாய்க்கு அதில் நம்பிக்கை இல்லை. எனினும் பயந்துபோய் ஜன்னல் திரையை மூடிவிட்டார். ஆயினும் Mariette மீண்டும் அப்பக்கம் பார்த்தார். அந்தப் பெண் சிரித்த முக்த்துடன் அதே இடத்தில் நிற்பதைக் கண்டார். துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, தான் வைத்திருந்த செபமாலையை எடுத்துச் செபிக்கத் தொடங்கினார். சிறிது நேரம் சென்று, அப்பெண்ணின் உதடுகளும் செபம் செய்வது போன்று அசைந்தன. வீட்டுக்கு வெளியே வருமாறு அப்பெண் கையசைத்தார். Mariette கதவருகே சென்றபோது அவரது தாய் பயந்து கதவை அடைத்து பூட்டி விட்டார். மீண்டும் ஜன்னல் அருகே வந்து பார்த்தபோது அப்பெண் மறைந்து விட்டார். மறுநாள் காலை செவ்வாய்க்கிழமையன்று திருப்பலியில் Marietteவை முதன்முறையாகப் பார்த்தப் பங்குக்குரு Jaminவுக்கு வியப்பு. மறைக்கல்வி வகுப்புக்கும் சென்றார் Mariette. இந்த நல்மாற்றத்துக்கு காரணம் கேட்டார் அக்குரு. நடந்ததை விளக்கினார் Mariette.
அடுத்து சனவரி 18ம் தேதி புதன்கிழமை மாலை 7 மணிக்கு Mariette முன்பக்கத் தோட்டத்துக்குச் சென்று முழந்தாளிட்டு செபமாலைச் செபிக்கத் தொடங்கினார். அவரின் தந்தை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். Mariette திடீரென கைகளை மேலே உயர்த்தினார். ஏனெனில் இரண்டு உயரமான தேவதாரு மரங்களுக்கு இடையே ஒல்லியான ஓர் அழகிய பெண் இறங்கி வந்து Marietteவுக்கு ஓரடி தூரத்தில் வந்து நின்றார். அப்பெண் Marietteவுடன் சேர்ந்து செபிக்கத் தொடங்கினார். சாலையைக் கடந்து தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு அவர் அழைத்தார். அவர்கள் இருவரும் சென்றபோது ஒரு சிறிய நீர் ஓடையை அப்பெண் தொட்டார். Marietteவும் அதைக் கவனமுடன் தொட்டார். இந்த ஓடை தனக்கானது என்று சொல்லி மறைந்தார் அப்பெண்.
அடுத்த நாள் சனவரி 19ம் தேதி வியாழன் மாலை 7 மணிக்கு பனியில் முழங்காலிட்டுச் செபித்துக் கொண்டிருந்தார் Mariette. அக்காட்சியில், தான் ஏழைகளின் கன்னிமரி எனத் தன்னை அப்பெண் அறிமுகம் செய்தார். மேலும் அந்த நீரோடை அனைத்து நாடுகளின் நோயாளிகளுக்கு உரியது எனவும் கூறினார். பின்னர் சனவரி 20, பிப்ரவரி 11, 15, 20, மார்ச் 2 ஆகிய தேதிகளில் காட்சி கொடுத்தார் அப்பெண். மார்ச் 2ம் தேதியன்று இடம்பெற்ற 8வது காட்சிக்கு முன்னர் Mariette செபித்துக் கொண்டிருந்தபோது மழை கொட்டியது. மூன்று செபமாலைகள் செபித்தார். மழை நின்றது. அக்காட்சிக்குப் பின்னர் அன்னைமரியா தனக்குக் கூறியவற்றை தனது வீட்டில் தெரிவித்தார். நானே மீட்பரின் தாய். கடவுளின் தாய். நிறையச் செபம் செய் என்று அன்னைமரியா சொல்லியிருந்தார்.
அன்னைமரியா Marietteவுக்குக் கூறியது போன்று நாமும் நிறைய செபம் செய்வோம்.








All the contents on this site are copyrighted ©.