2013-05-28 16:09:01

விவிலியத் தேடல் – 'நள்ளிரவில் நண்பர்' உவமை: பகுதி 3


RealAudioMP3 மே 22, கடந்த புதனன்று 'பல்வேறு உயிரின அகில உலக நாளை' நாம் கடைபிடித்தோம். எனவே, 'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையை அன்று நாம் சிந்தித்தபோது, இந்த உவமையில் இயேசு குறிப்பிட்டுச் சொல்லாத ஒரு கருத்தில் நாம் கவனம் செலுத்தினோம். ஒரே ஓர் அறை கொண்ட இஸ்ரயேல் மக்களின் எளிய இல்லம் இவ்வுவமையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தாய், தந்தை, பிள்ளைகள், ஒருவேளை, செல்ல மிருகங்கள் என்று அனைவரும் பகிர்ந்து வாழ்ந்த அந்த ஓர் அறை இல்லம், இவ்வுலகம் என்ற இல்லத்தைப்பற்றி நமக்குச் சொல்லித்தரும் ஓர் உன்னத பாடத்தை அன்று சிந்தித்தோம். அனைத்து உயிர்களோடும் மனிதர்கள் இவ்வுலகைப் பகிர்ந்து வாழவேண்டும் என்ற உண்மையைச் சொல்ல, தொடக்க நூலின் 7 பிரிவில் நாம் வாசிக்கும் நோவா பெட்டகம் மற்றொரு அடையாளமாக விளங்குகிறது. இவ்வுலகம் என்ற இல்லத்தில் மனிதர் அனைவருக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் சமமான பங்கு உண்டு, எனவே வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் என்ற சுயநல பிடியிலிருந்து இந்த உலகை மீட்டு, மீண்டும் அனைத்து உயிரினங்களோடு அதைப் பகிர்வதால் மட்டுமே இந்த உலகம் தொடர்ந்து வாழமுடியும் என்ற கண்ணோட்டத்தில் இந்த உவமையின் ஒரு பகுதியை எண்ணிப் பார்த்தோம். இன்று மீண்டும் இந்த உவமையில் இயேசு கூறவந்த மையக் கருத்துக்குத் திரும்புவோம்.
இறைவனிடம் வேண்டக் கற்றுத்தாரும் என்று கேட்ட சீடர்களுக்கு இயேசு கற்றுத்தந்த அழகிய செபத்துடன் லூக்கா நற்செய்தி 11ம் பிரிவு ஆரம்பமாகிறது. உலகப் புகழ்பெற்ற இந்தச் செபத்தைத் தொடர்ந்து, நாம் எவ்விதம் செபிப்பது என்பதைக் கற்றுத்தர இயேசு ஓர் எளிய நிகழ்ச்சியைக் கூறுகிறார். மனம் தளராமல் செபிக்கவேண்டும் என்ற மையக் கருத்தை வலியுறுத்த, இயேசு இந்த உவமையைப் பயன்படுத்துகிறார். இந்த மையக் கருத்தைச் சிந்திப்பதற்குமுன், இந்த உவமையில் இயேசு தீட்டியுள்ள அந்த எளியதொரு காட்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைச் சிந்திப்பது நல்லது.

இஸ்ரயேல் நாட்டின் சிற்றூர் ஒன்றில் நடைபெறுவதாக இயேசு கூறும் காட்சி, மனதில் இதமான எண்ணங்களை, உணர்வுகளை உருவாக்குகின்றது. அதே நேரம், நாம் வாழும் இன்றைய வாழ்வுக்குச் சவலான கேள்விகளையும் எழுப்புகின்றது. அறிவியல் முன்னேற்றங்கள், நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படாத கிராமங்களை, சிற்றூர்களை நம் மனக்கண்ணில் பதிக்கும் இக்காட்சியில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள், நமது இன்றையச் சூழலில் எண்ணிப்பார்க்க முடியாத நிகழ்வுகளாக உள்ளன:
இஸ்ரயேல் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் பயணம் செய்யும் ஒருவர் ஓர் ஊரை அடைகிறார். இருள் பரவ ஆரம்பித்ததால், அவர் அந்த ஊரிலேயே தங்க முடிவு செய்கிறார். அதுவும், அவ்வூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு சென்று சேர்கிறார். எந்நேரம் ஆனாலும் சரி, தன் நண்பர் வீட்டில் தனக்கு வரவேற்பு இருக்கும் என்பதில் அத்தனை நம்பிக்கை அவருக்கு. பயணக் களைப்புடன், பசியுடன் வீடுதேடி வந்த நண்பருக்கு கொடுக்க உணவு ஒன்றும் இல்லை. எனவே, அவர் தன் அடுத்தவீட்டு நண்பரிடம் உணவு கேட்டுச் செல்கிறார், நடு இரவில். அடுத்தவீட்டு நண்பரோ, ஒரே அறைகொண்ட வீட்டில் வாழ்பவர். அவர் தன் குழந்தைகளுடன் அந்த அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரை அந்த நடு இரவில் எழுப்பலாமா, வேண்டாமா என்ற தயக்கம் ஏதுமில்லாமல், அவர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார் நம் உவமையின் நாயகன்... நள்ளிரவில் வந்த நண்பர்!
அறிவிப்பு ஏதுமின்றி வரும் விருந்தினர், அவருக்கு உணவு பரிமாற அடுத்த வீட்டினரை இரவில் எழுப்பும் நண்பர் என்று இக்கதையில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள்... இப்படியும் நடக்க முடியுமா என்ற வியப்பை நம்முள் உருவாக்குகின்றன. நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும், இவ்வகை நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவை, வசதிகள் நிறைந்த மாளிகைகளில் நடப்பது அரிது. எளிய, ஓரறை மட்டுமே கொண்ட குடிசைகளில் இன்றும் நடக்கத்தான் செய்கின்றன. அந்தக் குடிசைகள் மத்தியில் நிலவும் விருந்தோம்பல், பாசம், பகிர்வு, ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகிய அற்புதங்கள் உணர்ந்துபார்க்க வேண்டிய உண்மைகள். இத்தகைய எளிமையை இழந்து விட்டதால், நாம் தொலைத்துவிட்ட நட்பு, பகிர்வு, ஆகிய உயர்ந்த பண்புகளை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது இந்த உவமை.

இயேசு இந்த உவமையை "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று..." என்று ஆரம்பித்திருப்பது அழகான ஓர் அழைப்பு. ஆம். அந்த உவமையில் சொல்லப்பட்டுள்ள நாயகனைப் போல நாம் இருக்க வேண்டும் என்று நமக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு. நம் கதையின் நாயகன் எவ்விதம் விடாமுயற்சியுடன் அடுத்த வீட்டு நண்பரிடம் தன் வேண்டுதல்களை எழுப்பினாரோ, அதேபோல் நாமும் இறைவனிடம் வேண்டுதல்களை எழுப்பவேண்டும் என்ற பாடத்தை இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார்.
உதவி கேட்டுச் சென்ற நாயகன் நாம் என்றால், உதவி செய்ய மறுத்து, வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அடுத்தவீட்டுக்காரரை இறைவனுக்கு ஒப்புமைப்படுத்துகிறாரா இயேசு? நண்பரின் வேண்டுதல்களைக் கேட்டும், கதவைத் திறக்க மறுத்த நண்பரைப் போலத்தான் இறைவனும் இருப்பாரா? என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. இக்கேள்விகளுக்குத் தகுந்த விடை பெறுவதற்கு இயேசுவின் உவமைகளில் காணப்படும் இருபிரிவுகளைத் தெரிந்துகொள்வது பயனளிக்கும்.

இயேசுவின் உவமைகளில், ஒப்புமைகளைக் காட்டும் உவமைகளும், வேற்றுமைகளைக் காட்டும் உவமைகளும் உண்டு. விண்ணரசு எப்படிப்பட்டது என்பதை விளக்க, இயேசு கூறிய பல உவமைகளை மத்தேயு நற்செய்தி 13ம் பிரிவில் நாம் வாசிக்கிறோம். கடுகு விதை, புளிப்பு மாவு, புதையல், முத்து என்ற பல உருவகங்களைக் கொண்டு இயேசு விண்ணரசை விளக்குகின்றார். இந்த உவமைகளில் எல்லாம்,
'விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்',
'விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்',
'விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்',
'விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்'.
(மத்தேயு நற்செய்தி 13: 32,33,44,47)
என்ற வார்த்தைகளை இயேசு பயன்படுத்தியுள்ளார். இவை 'ஒப்புமை உவமைகள்' என்று வழங்கப்படும்.

'நள்ளிரவில் நண்பர்' உவமையில் இயேசு வேற்றுமையைக் காட்ட விரும்புகிறார். குழந்தைகளுடன் உறங்கச் சென்றபின், தன்னை எழுப்பி உதவிகேட்கும் நண்பருக்கு உதவ மறுத்தார் அடுத்த வீட்டுக்காரர். வந்திருந்த நண்பரோ தொடர்ந்து வேண்டியதால், மனம் மாறி, அவருக்கு உதவிச் செய்தார். நம் இறைவன் இப்படிப்பட்டவர் அல்ல. தேவை என்று வந்தவருக்கு உதவுவதே இறைவன், என்ற வேற்றுமையை வலியுறுத்துகிறார் இயேசு. எனவேதான், இந்த உவமையைக் கூறிமுடித்த அதே மூச்சில் இயேசு மனதில் பதியும் சில வரிகளைக் கூறுகிறார். லூக்கா நற்செய்தி 11: 9-10ல் இயேசு கூறும் புகழ்மிக்க அந்த வரிகள் இதோ:
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
உதவிகேட்டு வந்த நண்பன் கதவைத் தட்டியும், உடனே திறக்காதவருக்கு மாற்றாக, தட்டியதும் திறப்பவர் இறைவன் என்ற வேற்றுமையைக் கூறும் உவமை இது.

உதவிகேட்டு வந்தவரின் சொற்கள் உண்மையான செபத்தின் அழகியதோர் அம்சத்தை வெளிப்படுத்துகிறது. அதுதான், தனது உண்மை நிலையை உள்ளவாறு எடுத்துரைத்தல். "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" (லூக்கா நற்செய்தி 11: 5-6) என்பதே நமது கதையின் நாயகன் எழுப்பும் வேண்டுதல். நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவர் முன் தன் குறையை எடுத்துரைக்க, மனதில் மிகுந்த பணிவும், துணிவும் தேவை.
நம்மிடம் உள்ள நிறைகளையும், குறைகளையும் அறிந்துகொள்வது, தன்னறிவில், தன்னைப்பற்றிய தெளிவில் உயர்ந்ததொரு நிலை. நமது உண்மை நிலையை அடுத்தவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஒளிவுமறைவின்றி வாழ்வதை ஒரு புனித நிலை என்றே சொல்லவேண்டும். ஆனால், நம்மில் பலர் நமது உண்மை நிலையை, குறிப்பாக, நமது குறைகளை மறைப்பதில் மிக அதிக கவனம் செலுத்துகிறோம். இவ்விதம் நமது உண்மை நிலையை அடுத்தவரிடமிருந்து மறைத்து வாழ்வதற்கு, நாம் முகமூடிகள் அணிய வேண்டிவரும். இல்லாததை இருப்பதுபோலவும், இருப்பதை இல்லாததுபோலவும் மற்றவர்களிடம் காட்ட நாம் பல வேடங்கள் புனைந்து நடிக்க வேண்டிவரும். அதிலும், உண்மையான நண்பர்கள் மத்தியில், இத்தகைய ஒளிவு மறைவுகள் வளரும்போது, நட்பிலும் விரிசல்கள் விழும்.

இத்தகைய முகமூடிகளும், நடிப்பும் தேவையில்லாத மன அழுத்தங்களை நம்முள் உருவாக்கும். 'என்னைத் தேடி வந்திருக்கும் நண்பருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்ற வேண்டுதலைக் கூறும் நம் உவமையின் நாயகன், நம்மிடம் உள்ள நிறை, குறைகளை ஏற்றுக்கொள்ளும் பணிவான, துணிவான மனநிலையை நமக்குக் கற்றுத்தருகிறார்.

இறைவனிடம் வேண்டும்போது, நம் உண்மை நிலையை எடுத்துச்சொல்ல வேண்டுமா? நம்மைப்பற்றி உள்ளும், புறமும் அறிந்தவர்தானே இறைவன்? நமது தேவைகளை நமக்கு முன் அறிந்தவர்தானே அவர்? அவரிடம் நம் உண்மை நிலையை எடுத்துச் சொன்னால்தான் அவருக்குத் தெரியப்போகிறதா? என்ற கேள்விகள் எழலாம். இக்கேள்விகளுக்கும், இறைவனிடம் வேண்டுதல் குறித்த மற்ற கேள்விகளுக்கும் விடை தேடுவோம் நமது அடுத்த விவிலியத் தேடலில்.








All the contents on this site are copyrighted ©.