2013-05-28 16:10:43

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவைப் பின்செல்வது ஒரு தொழில் அல்ல, அது சிலுவையின் வழி


மே,28,2013. இயேசுவை அறிவிப்பது என்பது வெறும் மினுமினுப்பான வெளி ஆடம்பரமாக இல்லாமல் நேரிடையாக இதயத்துக்குச் சென்று நம்மை மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இயேசுவைப் பின்செல்வது என்பது அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பது அல்ல, அது ஒரு தொழில் அல்ல, ஏனெனில் இயேசுவின் வழி சிலுவையின் வழி என, புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
இயேசுவே, நாங்கள் உம்மைப் பின்செல்வதற்கு என்ன வெகுமதி கிடைக்கும் என்று பேதுரு இயேசுவிடம் கேட்டார், இந்தக் கேள்வி ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்வையும் சார்ந்ததாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், தம்மைப் பின்செல்கிறவர்களுக்குப் பல நல்ல காரியங்களோடு துன்பங்களும் இருக்கும் என்று இயேசு கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
ஆண்டவரின் பாதை, தாழ்மையின் பாதையாய், சிலுவையில் முடிந்த பாதையாய் இருந்தது என இந்நாளின் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவரின் வாழ்வில் துன்பங்களின்றி, எல்லாம் அழகானதாய்ச் சென்று கொண்டிருக்கும்போது, அங்கே ஏதோ தவறு இருக்கின்றது, அந்தக் கிறிஸ்தவர் உலகின் உணர்வுக்கு பெரிய நண்பராக இருக்கின்றார் எனச் சிந்திக்கத் தூண்டும் எனவும் கூறினார்.
அருளாளர் அன்னை தெரேசா பற்றி உலகம் சொல்லும்போது அவர் தினமும் பலமணி நேரம் திருநற்கருணை ஆராதனையில் செலவழித்தார் என்று சொல்வதில்லை, ஆனால் அவர் பிறருக்காக நிறைய நல்ல காரியங்களைச் செய்தார் என்றுதான் சொல்லுகிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இயேசுவைப் பின்செல்வதற்காகத் தங்கள் வீட்டையும், குடும்பத்தையும் விட்டுவந்தவர்கள் இவ்வுலகில் நூறு மடங்கைப் பெறுவதோடு, துன்பங்களையும் பெறுவர் என்பதை மறக்கக் கூடாது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு நமக்கு வெளிப்படுத்திய மற்றும் கற்றுத்தந்த வழியில் செல்ல அவரிடம் அருள் கேட்போம், அவர் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை, எப்போதும் அவர் நம்மோடு இருக்கிறார் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.