2013-05-28 16:13:35

ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர், பேராயர் தொமாசி


மே,28,2013. உலகில் பொதுவாக சமய சுதந்திர உரிமை கடுமையாக மீறப்படுவதும், குறிப்பாக, சில கிறிஸ்தவச் சமூகங்களுக்கு எதிரானத் தாக்குதல்கள் அண்மையில் அதிகரித்துவருவதும் திருப்பீடத்துக்கும் பல்வேறு சமய மற்றும் கலாச்சார மக்களை ஏற்றுள்ள சில சனநாயக அரசுகளுக்கும் மிகுந்த கவலையைக் கொடுத்துள்ளன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் தெரிவித்தார்.
மனித உரிமைகள் குறித்த ஐ.நா.வின் 23வது அமர்வில் இத்திங்களன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தோடு தொடர்புடைய செயல்களுக்காகக் கொல்லப்படுகின்றனர் என்றும், இன்னும் பிற கிறிஸ்தவர்களும், மற்ற சமயத்தினரும் கட்டாயமாக புலம் பெயர்கின்றனர், அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுகின்றன என்றும் கவலை தெரிவித்தார் பேராயர் தொமாசி.
சிரியாவின் அலெப்போவில் Yohanna Ibrahim, Boulos Yaziji ஆகிய இரு ஆயர்கள் அண்மையில் கடத்தப்பட்டுள்ளது குறித்தும், இத்தகைய பல செயல்கள் மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் இடம்பெறுவது குறித்தும் பேசிய பேராயர் தொமாசி, வரலாற்றுரீதியாகக் கிறிஸ்தவ மூலத்தைக் கொண்டுள்ள சில மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்தவம் பொதுவாழ்வில் ஓரங்கட்டப்படுகின்றது என்றும் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவை மதம், இனம் போன்ற பாகுபாடுகள் இன்றி கல்வித்துறையிலும் பிற துறைகளிலும் ஆற்றிவரும் சேவைகளைக் குறிப்பிட்டு, உலகில் சமய சுதந்திர உரிமை காக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.