2013-05-27 16:14:33

வாரம் ஓர் அலசல் – விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை


மே,27,2013 RealAudioMP3 . விட்டுக்கொடுப்பதால் எவரும் கெட்டுப்போவதில்லை. விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்கள் கெட்டுப்போனதாக வரலாறு இல்லை. ஒருசமயம் அந்த ஊரின் தெருவோரத்தில் விந்தையான விலங்கு ஒன்று அமர்ந்திருந்தது. அந்தப் பக்கம் போவோர் வருவோர் எல்லாரும் அதைப் பார்த்துப் பார்த்துப் பயந்தனர். அந்த விலங்கும் கண்ணில் கண்ட அனைவர்மீதும் தன் கொடூரப் பார்வையை வீசிப் பயமுறுத்தி வந்தது. அந்த விலங்கு உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ஊர் மக்கள் எல்லாரும் பயப்படும் அளவுக்கு அனைவரையும் மிரட்டி வைத்திருந்தது. ஒருநாள் அவ்வூருக்கு ஒரு முறுக்கு மீசை மிலிட்டரி ஆள் வந்தார். அந்த விலங்கு பற்றிக் கேள்விப்பட்டு அதனை அடக்கி வைக்க ஆசைப்பட்டார். தனது கொடுவாளை உருவி அதனைத் தாறுமாறாகத் தாக்கினார். என்ன ஆச்சரியம், மிலிட்டரியின் வாள் படப் பட அதன் உருவம் பெரிதாகிக் கொண்டே போனது. எவ்வளவு பெரிதாகியது என்றால் அந்தத் தெருவையே அது அடைத்துக் கொண்டது. அப்போது அந்தப் பக்கமாக வந்த துறவி ஒருவர் இந்த விலங்கு பற்றிக் கேள்விப்பட்டார். அதனருகே சென்று பார்த்ததும் பரபரப்பானார். பின்னர் அந்த மிலிட்டரியிடம், “தம்பி, என்ன காரியம் செய்துவிட்டீர்கள். அந்த விலங்கின் இயல்பு பற்றித் தெரியாமல் அதன்மேல் கைவைத்து விட்டீர்களே” என்றார். உடனே ஊர் மக்கள் எல்லாரும் கூடிவிட்டனர். துறவியே, அப்படி என்னதான் விலங்கு அது என்று கேட்டனர். இது தெரியாதா, அந்தக் கொடிய தீய விலங்கின் பெயர் விதண்டா வாதம் என்று பதில் சொன்னார் துறவி. வீண் வாதம், வீண் விளைவு என்று சொல்லிக் கொண்டே போனார் துறவி.
அன்பர்களே, வீண் வாதம் வீண் விளைவைத் தரும். ஆனால் வீண் வாதங்களைத் தவிர்த்து விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இன்பமான வாழ்வைத் தரும். விவிலியத்தில் இதற்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டு இருக்கின்றது. ஆபிராமும் லோத்தும் சகோதரர்கள். அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆபிராம் லோத்தை நோக்கி, "எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில் நாம் உறவினர். நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்" என்றார். லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். அவர் யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார்(தொ.நூ.13). இவ்வாறு வீண் வாதங்களோ சண்டைகளோ இன்றி அவர்கள் பிரிந்தனர். அதன்பின்னர் ஆபிராமை ஆண்டவர் ஆசீர்வதித்து, அவரது வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வதாக உறுதியளித்தார். ஆபிராமே ஆசியாக விளங்குவார் என்றும் ஆண்டவர் கூறினார். அந்த வாக்குறுதி போன்று இன்றும் அவர் விசுவாசத்தின் தந்தை எனப் போற்றப்பட்டு வருகிறார்.
விட்டுக்கொடுப்பதால் எவரும் கெட்டுப்போவதில்லை என்பதற்கு விவிலியத் தந்தை ஆபிரகாமின் செயல் நல்லதோர் எடுத்துக்காட்டு. இன்றும் உலகில் விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள் இல்லாமல் இல்லை. பிரேசில் நாடு, 12 ஆப்ரிக்க நாடுகளின் ஏறக்குறைய 90 கோடி டாலர் கடனை இரத்து செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக மே 25, கடந்த சனிக்கிழமையன்று ஒரு செய்தி வெளியானது. எண்ணெய், எரிவாயு ஆகிய வளங்களைக் கொண்ட Congo-Brazzaville, டான்சானியா, ஜாம்பியா உட்பட 12 ஆப்ரிக்க நாடுகளின் வெளிநாட்டுக் கடன்களை மன்னிப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. Congo-Brazzaville 35 கோடியே 20 இலட்சம் டாலர், டான்சானியா 23 கோடியே 70 இலட்சம் டாலர் மற்றும் ஜாம்பியா 11 கோடியே 34 இலட்சம் டாலர் வெளிநாட்டுக் கடனைக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் ஏழாவது இடத்தில் இருக்கின்ற தென் அமெரிக்க நாடான பிரேசில், தனக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1970களிலிருந்து இக்கடன்சுமை இருந்து வரும் Ivory Coast, Gabon, Guinea, Guinea Bissau, Mauritania, Congo குடியரசு, Sao Tome - Principe, Senegal, Sudan ஆகிய நாடுகளும் இதனால் பலன்பெறவிருக்கின்றன. பிரேசிலின் இக்கடன் மன்னிப்பால் இழப்பைவிட ஆதாயமே அந்நாட்டுக்கு அதிகம் இருக்கும் என ஊடகங்கள் கூறுகின்றன.
விட்டுக்கொடுத்து வாழ்வதால் யாரும் கெட்டுப்போவதாகத் தெரியவில்லை. ஆயினும் நம் குடும்பங்களிலும், நாம் வாழும் சமூகங்களிலும் இந்தப் பண்பு குறைவுபடுவதற்குக் காரணம் என்ன? எத்தனை கவுரவக் கொலைகள், எத்தனைப் பங்காளிக் கொலைகள், எத்தனை சகோதரக் கொலைகள் தினமும் நடக்கின்றன. சகோதரப் பாசத்தைவிட, நல்ல உறவுகளைவிட கவுரவமும் சொத்தும் பெரிதாக இருக்கின்றனவே. மனித உயிரின் மாண்பும், மனித வாழ்வின் மகத்துவமும் மிக எளிதாக ஒரு நிமிட கோபவெறிக்குள் பொசுங்கி விடுகின்றன. இச்சனிக்கிழமையன்று இந்தியாவின் சத்தீஸ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்மீது மாவோயிஸ்டுகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இருநூறுக்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து நடத்திய திடீர்த் தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இலண்டனில் லீ ரிக்பி(Lee Rigby) என்ற பிரித்தானியப் படைவீரர் கடந்த புதன்கிழமையன்று பகலில் கழுத்து அறுத்து கொலைச் செய்யப்பட்டுள்ளார். தென் இத்தாலியில் 17 வயதுக் காதலன், 16 வயதுக் காதலியை பலமுறை கத்தியால் குத்திய பின்னர் முகத்திலும் கையிலும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு கொன்றுள்ளார். இதேமாதிரியான நெஞ்சைப் பதறவைக்கும் செய்தி ஒன்று கடந்த செவ்வாயன்று தமிழகத் தினசரிகளில் பிரசுரமாகியிருந்தது.
தென் தமிழகத்தின் நாகர்கோவிலை அடுத்த வாத்தியார்விளையைச் சேர்ந்தவர் சிவா. இவர் சென்னையை அடுத்த பொன்னேரியை சேர்ந்த சவுமியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சாதியினர். சவுமியா குடும்பத்தைவிட சிவாவின் குடும்பம் கொஞ்சம் வசதிக் குறைவும்கூட. இந்தக் காதல் திருமணத்தைச் சவுமியாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. சவுமியாவுக்கு மூத்த அண்ணன்மீது பாசம் அதிகம். எனவே அவர் மூத்த அண்ணனை மிகவும் நம்பினார். இம்மாதம் 19ம் தேதி அவரின் மூத்த அண்ணன் தனது நண்பர்களோடு சவுமியாவின் வீட்டுக்குச் சென்று எவ்வளவோ சொல்லித் தங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டும் சவுமியா மனது மாறவில்லை. மாலையில் மீண்டும் நண்பர்களோடு வந்த மூத்த அண்ணன், சவுமியாவை கத்தியால் கழுத்திலும் வயிற்றிலும் குத்தியிருக்கிறார். சவுமியா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்துவிட்டார். இதைத் தடுக்கச் சென்ற சிவாவின் அப்பாவையும் கத்தியால் குத்தியிருக்கிறார். அவரும் இறந்துட்டார்.
அன்பர்களே, விட்டுக்கொடுப்பதால் என்ன கெட்டுவிடப்போகிறது எனச் சிந்திப்போமா? நாம் ஒவ்வொருவரும் பெரிதாக நினைக்கும் சுயம், சுய கவுரவம் இதற்குத் தடையாக இருக்கின்றன. தான் எதிர்பார்த்தபடி பிறர் நடக்காதபோது சுயம் துடிக்கின்றது. நாம் இறக்கும்போது நம்மோடு எடுத்துச் செல்வது என்ன? நமது வாழ்வு நமது கையில் இருக்கின்றதா? நமது உயிரைக் காப்பற்றிக் கொள்ள நம்மால் இயலுமா?. இறைவன் நமது உயிரை, எப்படி, எந்த நேரத்தில், எந்த இடத்தில் எடுத்துக் கொள்வார் என்று யாருக்குத் தெரியும்?. பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் அவர்களின் பூதவுடல் இஞ்ஞாயிறன்று தீயுடன் சங்கமமாகிவிட்டது. சாகாவரம் படைத்த பல ஆயிரம் பாடல்களைப் பாடிய டி.எம்.எஸ். அவர்களைச் சாவு அணைத்துக் கொண்டது. அவரின் இறுதிச் சடங்குகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி மட்டுமே செலுத்த முடிந்தது.
ஒரு தந்தை தனது இரண்டு ஏக்கர் நிலத்தை தனது இரு மகன்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு இறந்து விட்டார். ஆனால் அந்த நிலங்களுக்கு இடையில் ஒரு புளிய மரம் இருந்தது. அம்மரம் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை. ஊர்ப் பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பத்து ஆண்டுகள் வழக்கு நடந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டபோது அண்ணனின் நிலம் அவரது வழக்கறிஞரிடமும் தம்பியின் நிலம் அவரது வழக்கறிஞரிடமும் சேர்ந்தன. அதன்பின்னர் அண்ணனும், தம்பியும் மற்றவரின் நிலங்களில் கூலியாட்களாக வேலைசெய்யத் தொடங்கினர். மனிதரின் பேராசைகளும், விட்டுக்கொடுக்காத இயல்பும், பிறர் அறிவுரையைக் கேட்காததும் இறுதியில் இந்நிலையில்தான் கொண்டு சேர்க்கும்.
அக்காலம் மிதியடி கண்டுபிடிக்கப்படாத காலம். மன்னர் ஒருவர் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார். அவரது காலில் முள் குத்திவிட்டது. உடனே அமைச்சர்களைக் கூப்பிட்டு நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் படைவீரர்களை அனுப்பி நாட்டின் அனைத்து மாடுகளையும் வேட்டையாடி நாடு முழுவதும் மாட்டுத்தோல் கம்பளம் விரிக்கும்படி கட்டளையிட்டார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த துறவி ஒருவர் மன்னரிடம், கால்களைக் காப்பதற்கு இரண்டு துண்டு மாட்டுத்தோல் போதுமே, இதற்காக ஏன் இவ்வளவு வீண் செலவு என்று சொன்னாராம். உடனே மன்னரும் தனது கட்டளையை மாற்றினார். அப்படித்தான் காலுக்கு மிதியடி போடும் பழக்கம் வந்தது எனச் சொல்லப்படுகிறது.
அன்பு நெஞ்சங்களே, பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து விட்டுக்கொடுத்து வாழ்வோம். நீயா? நானா என்று நடத்துகின்ற போட்டிக் களமாக நம் வாழ்வை மாற்றினால் அது கெட்டுப்போய்விடும். மாறாக, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் நாம் வெற்றியாளர்களாக வாழலாம். ஆம். விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்கள் கெட்டுப்போனதாக வரலாறு இல்லை.







All the contents on this site are copyrighted ©.