2013-05-25 16:58:14

வடகொரியாவின் புதிய பரிந்துரை நம்பிக்கையை மீண்டும் திறந்துள்ளது, தென் கொரிய ஆயர்கள்


மே,25,2013. இரண்டாயிரமாம் ஆண்டில் இரு கொரிய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை இவ்விரு நாடுகளும் சேர்ந்து கொண்டாடுவதற்கு வட கொரியா, தென் கொரியாவுக்கு விடுத்துள்ள அழைப்பு, நம்பிக்கையை மீண்டும் திறந்துள்ளது என, தென் கொரிய ஆயர்கள் கூறினர்.
வடகொரியாவின் இம்முயற்சியானது, நம்பிக்கையின் கதவை மீண்டும் திறக்க முடியும் என்பதன் அடையாளமாக உள்ளது என, தென் கொரிய ஆயர்கள் பேரவையின் பல்சமய உரையாடல் மற்றும் நீதி ஆணைக்குழுவின் தலைவர் Kwanju பேராயர் Igino Kim Hee-joong கூறினார்.
வடகொரியா முன்வைத்துள்ள இந்த அழைப்பு குறித்து நன்றாக மதிப்பீடு செய்யவிருப்பதாகத் தென் கொரிய கூறியுள்ளது, இருந்தபோதிலும், பல்சமய உரையாடலை விரைவில் தொடங்குவதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றுரைத்த பேராயர் Hee-joong, இரு கொரிய நாடுகளின் சமயத் தலைவர்களிடையே கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு, வட கொரியச் சமயத் தலைவர்களுக்குத் தென் கொரிய ஆயர்கள் கடிதம் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.
வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு, பிரிந்துள்ள குடும்பங்களின் சந்திப்பு, இவ்விரு அரசுகளுக்கிடையே உரையாடல் ஆகியவற்றைப் பரிந்துரைக்கும் ஒப்பந்தத்தில் இவ்விரு நாடுகளின் தலைவர்களும் இரண்டாயிரமாம் ஆண்டில் கையெழுத்திட்டனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.