2013-05-25 16:55:55

மத்திய கிழக்கில் இடம்பெறும் அனைத்துக் கலவரங்களுக்கும் பாலஸ்தீனியப் பிரச்சனையே அடிப்படைக் காரணம், எருசலேம் முதுபெரும் தலைவர்


மே,25,2013. கடந்த நூறு ஆண்டுகளாக மத்திய கிழக்கில் இடம்பெறும் அனைத்துக் கலவரங்களுக்கும் பாலஸ்தீனியப் பிரச்சனையே அடிப்படைக் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் Fouad Twal கூறினார்.
WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் “மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள்” என்ற தலைப்பில் பெய்ரூட்டில் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய முதுபெரும் தலைவர் Twal இவ்வாறு கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு நீதியான மற்றும் நிலைத்தத் தீர்வு காணப்படும்வரை, இவ்விரு தரப்புகளுக்குமிடையே இடம்பெற்றுவரும் சண்டைகள், பகைமை, அடக்குமுறை, ஏமாற்று, இரட்டைநிலைகள், ஆக்ரமிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து வளர்த்து வரும் என்று எச்சரித்தார் முதுபெரும் தலைவர் Twal.
அனைத்துலகச் சமுதாயமும், மத்திய கிழக்கிலுள்ள நாடுகளும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டிய நாடுகளும் உண்மையாகவும், நன்மனத்துடனும் செயல்படாதவரை கசப்புணர்வும் ஆக்ரமிப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் எருசலேம் முதுபெரும் தலைவர் Twal கூறினார்.
உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் பெய்ரூட்டில் நடத்திய இந்த 5 நாள் கருத்தரங்கு இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.