2013-05-24 11:35:36

மே 25, 2013. கற்றனைத்தூறும்...... கவலையும் கொழுப்பும் !


இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சேர்வதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இதயத்தின் வால்வுகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நம் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் இல்லையெனில் மாரடைப்பு வராது என்று நம்புகிறோம்.
ஆனால், கொழுப்பு இல்லாவிட்டாலும், மாரடைப்பு வருகிறதே, அதற்கு என்ன காரணம்? பெரும்பாலான வியாதிகளுக்கு நம் மனமும் முக்கிய காரணம். மனம் பாதிக்கப்பட்டால், உடல் பாதிக்கப்படுகிறது, மூச்சு பாதிக்கப்படுகிறது, என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மனதில் தேவையில்லாததை போட்டுக்கொண்டு கவலைப்படுவது, செய்த தவறை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவது, குடும்பத்தில், வெளியில் பிரச்னை என்பதால் நொந்து கொள்வது, பிள்ளைகள் படிக்கவில்லையே என்று வேதனைப்படுவது போன்றவைதான் மன அழுத்தம் ஏற்பட காரணம்.
கொழுப்பே இருக்க வேண்டாம், மனம் பாதிக்கப்பட்டாலே, அதனால், இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, மாரடைப்பு வர வாய்ப்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நல்ல உடல்நலம்கொண்ட 20 ஆண், பெண்களை வைத்து நடத்திய ஆய்வில், மனதில் அழுத்தம் அதிகமாகும் போது, அது, இரத்த அழுத்தத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளனர் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள்.
இந்த ஆய்வுகளில் கண்ட முடிவுகளின் அடிப்படையில் மேலும் ஆராய்ந்து, “மாரடைப்பு வர காரணம், மனம் தான். அதில் எந்த காரணத்தினாலும், அழுத்தம் ஏற்பட்டால், அது உடலை பாதிக்கிறது. அப்படி பாதிக்கும்போது, இரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது, அது தான் மாரடைப்புக்கு காரணம். அதனால், மனதில் அழுத்தம் அதிகப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு மன ரீதியான பயிற்சிகள் முக்கியம்” என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மனம் மூலம் தான் மாரடைப்பு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்க மருத்துவ ரீதியாக இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் மேலும் கூறுகின்றனர்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.