2013-05-24 16:34:49

திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய ஆயர்களிடம் : இயேசு மீதான முழுமையான அன்பே கடவுளின் மனிதரை அளப்பதாகும்


மே,24,2013. ஓர் ஆயர் அல்லது ஓர் அருள்பணியாளர் இயேசு மீது கொண்டிருக்கும் ஆழமான அன்பும், கடவுளுக்காக அனைத்தையும் வழங்குவதற்கு அவரிடமுள்ள மனவிருப்பமுமே, மேய்ப்பர் தனது அருள்பணியை எவ்வளவு நன்றாகச் செய்கிறார் என்பதற்கான துல்லியமான அளவுகோள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இவ்வியாழன் மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற திருவழிபாட்டின் இறுதியில் ஏறக்குறைய 300 இத்தாலிய ஆயர்களுடன் சேர்ந்து விசுவாசத்தை அறிக்கையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆயர்கள் குழுவில் தானும் ஓர் ஆயராக இருப்பதாகத் தெரிவித்தார்.
நம்பிக்கை ஆண்டின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இத்திருவழிபாட்டில் தனது எண்ணங்களை ஆயர்களுடன் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இத்தாலியில் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக நிறுவனங்களுடன் உரையாடல் நடத்தி ஆயர்கள் ஆற்றிவரும் பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்கப்படுத்தினார்.
ஆயர்களாகிய நாம் ஒரு நிறுவனத்தின் முகமல்ல அல்லது நிறுவனமாக வாழ வேண்டியவர்கள் அல்ல என்று இத்தாலிய ஆயர்களிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், சகோதரத்துவ அன்பில் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு உயிர்த்த ஆண்டவரின் பிரசன்னம் மற்றும் அவரின் செயலின் அடையாளமாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.
தன்மீதும், தனது மந்தையின்மீது எப்போதும் விழிப்புடன் இருப்பது, ஆர்வமற்ற மேய்ப்பராக மாறுவதைத் தவிர்ப்பதற்கு அவசியமானது என்றும் கூறிய திருத்தந்தை, மேய்ப்பரில் விழிப்புணர்வு குறைவுபடுவது, மறதியையும், கவனச்சிதறலையும், ஏன் துன்பத்தையும்கூட கொண்டுவரும், பணத்தில் ஆர்வத்தை அல்லது உலகின் உணர்வுகளோடு ஒத்துப்போகச் செய்யும் என்றும் கூறினார்.
உரோம் நகரில் இத்தாலிய ஆயர் பேரவையின் 65வது பொதுக் கூட்டம் இடம்பெற்று வருவதால் நாட்டின் அனைத்து ஆயர்களும் தற்போது உரோமையில் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.