2013-05-24 16:31:39

திருத்தந்தை பிரான்சிஸ் : துன்பங்களைப் பொறுமையோடு தாங்கி அடக்குமுறைகளை அன்பினால் வெல்ல வேண்டும்


மே,24,2013. துன்பங்களையும் சோதனைகளையும் பொறுமையோடு தாங்கி அவற்றை அன்பினால் வெல்வதே கிறிஸ்தவருக்குரிய அருள்நிலையாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சகாய அன்னைத் திருவிழாவாகிய இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்வது எளிது அல்ல என்றும் கூறினார்.
இன்னல்கள் வெளியேயிருந்து வரும்போது அல்லது இதயத்தில் பிரச்சனைகள் இருக்கும்போது அவைகளைத் தாங்கிக் கொள்வது சுலபமல்ல என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒருவர் தனது துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும்போது அவற்றைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதல்ல, ஆனால், அத்துன்பங்களைக் கட்டாயமாக ஏற்க வேண்டும், அதன்மூலம் அவற்றால் நாம் வீழ்த்தப்பட மாட்டோம், அவற்றைப் பலத்தோடு ஏற்பது கிறிஸ்தவப் புண்ணியமாகும் என்றும் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துன்பங்களைத் தாங்கிக் கொள்வது ஓர் அருள், நமது துன்பவேளைகளில் இவ்வருளைக் கேட்க வேண்டுமென்றும் கூறிய திருத்தந்தை, அன்பினால் சோதனைகளை வெல்வதும் ஓர் அருள் என்று கூறினார்.
நம்மைத் துன்புறுத்தியோருக்காக, பகைவர்களுக்காகச் செபிப்பது எளிது அல்ல, நாம் நம் பகைவர்களை மன்னிக்காவிடில், அவர்களுக்காகச் செபிக்காவிடில் நாம் தோற்கடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக இருப்போம், எனவே துன்பங்களைப் பொறுமையோடு தாங்கி அவற்றை அன்பினால் வெல்வதற்கு நம் அன்னைமரியிடம் வரம் கேட்போம் எனத் தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி அறிவிப்புப் பேராயச் செயலர் பேரருள்திரு Savio Hon Tai-Fai, இன்னும், சீனக் குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலையினர் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர். இன்னும், திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celliம், அவ்வவையின் பணியாளர்களும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர். இத்திருப்பலியின் இறுதியில் சகாய அன்னைமரிக்கு சீன மொழியில் ஒரு பாடல் பாடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.